வெற்றிமாறன் அடுத்த படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்.. புதிய டைட்டிலுடன் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Friday,June 14 2024]

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் ’விடுதலை 2’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை முடித்தவுடன் அவர் சூர்யா நடிக்க இருக்கும் ’வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கும் நிலையில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சில திரைப்படங்களை அவர் தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

கவின் நடிக்கும் ’மாஸ்க்’ படம் உட்பட சில படங்களை தயாரித்து வரும் வெற்றிமாறன் தயாரிக்கும் படங்களில் ஒன்று ’மபொசி’. பிரபல குணச்சித்திர நடிகர் மற்றும் ’கன்னி மாடம்’ என்ற படத்தை இயக்கிய போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

விமல் மற்றும் சாயாதேவி நாயகன், நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் டைட்டிலான ’மபொசி’ என்பது ’மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என்பதன் சுருக்கம் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான போஸ்டரில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி இந்த படத்திற்கு ’சார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ’மபொசி’ என்பதற்கு பதிலாக ’சார்’ இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய டைட்டிலுடன் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது என்பதும் இந்த போஸ்டரில் விமல் ஆசிரியர் கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.