விவசாயிகள் போராட்டம் குறித்து வெற்றிமாறன் கூறிய 'நச்' கருத்து!

  • IndiaGlitz, [Friday,February 05 2021]

மத்திய அரசு பிறப்பித்த புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை திரையுலக நட்சத்திரங்கள் கண்டு கொள்ளாத போது திடீரென சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்தார்

இந்த ட்வீட்டுக்கு பின்னரே இந்தியாவில் உள்ள பல திரையுலக பிரபலங்கள் விழித்துக் கொண்டு தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அதே சமயம் சர்வதேச பிரபலங்களுக்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்

இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக எந்த பெரிய தமிழ் நட்சத்திரங்களும் கருத்துக்களை கூறாத நிலையில் சற்று முன்னர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்தார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் ஜிவி பிரகாஷை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் தனது கருத்தை இது குறித்து தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு அதிகாரம் மக்களால் தான் வழங்கப்படுகிறது, அரசு மக்களின் நலனைத்தான் காக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களை அல்ல. தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க விவசாயிகள் முயற்சி செய்கிறார்கள். உரிமைக்காக போராடுவதும் போராட்டத்தை ஆதரிப்பதும் தான் ஜனநாயகம்’ என்று கூறியுள்ளார்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெற்றிமாறன் நச்சென்று கருத்து தெரிவித்ததாக நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்