தமிழ் திரையுலகின் பழம்பெரும் குணச்சித்திர நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Tuesday,January 24 2023]

தமிழ் திரை உலகின் பழம்பெரும் குணசத்திர நடிகர் ராமதாஸ் காலமானதாக அவருடைய மகன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளதை அடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தமிழ் சினிமாவின் சிறந்த குணசத்திர நடிகர், எழுத்தாளர், இயக்குனர் ஈ ராமதாஸ், நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை அவரது மகன் கலைச்செல்வன் தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் அவரது இறுதி சடங்குகள் இன்று காலை 11 மணிக்கு அவரது இல்லத்தில் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த ஈ ராமதாஸ் சினிமா ஆசையால் சென்னைக்கு வந்து எழுத்தாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். ’ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ ’ராஜா ராஜா தான்’ ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ ’இராவணன்’ ’வாழ்க ஜனநாயகம்’ ஆகிய படங்களை இயக்கிய அவர் கின்னஸ் சாதனை திரைப்படமான ’சுயம்வரம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய 14 இயக்குனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக பல திரைப்படங்களில் ராமதாஸ், நடித்து வந்தார் என்பதும் குறிப்பாக’காக்கி சட்டை’ ’விசாரணை’ ’விக்ரம் வேதா’ ’மாரி 2 ’ ’அறம்’ உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.