'சத்யா' படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை மறைவு... இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Sunday,September 22 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ’சத்யா’ திரைப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை காலமானதை அடுத்து, கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா, 1962 ஆம் ஆண்டில் இருந்து ஏராளமான மலையாள படங்களில் நடித்தவர். பல படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து பிரபலமான நிலையில், கமல்ஹாசன் நடித்த 'சத்யா' திரைப்படத்திற்காக அவர் தமிழுக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த படத்தில் அவரது கேரக்டர் அனைவராலும் ரசிக்கப்பட்டது. தமிழில் அவர் நடித்த ஒரே படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள அவர், சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று கவியூர் பொன்னம்மா காலமான நிலையில், அவரது மறைவுக்கு கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது...

எல்லா நடிகர்களுக்கும் அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.

தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது.

'அம்மா' கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி.