பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
- IndiaGlitz, [Wednesday,September 08 2021]
மக்கள் திலகம் எம்ஜிஆரின் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பழம்பெரும் பாடலாசிரியர் புலமைபித்தன் காலமானார்.
பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியரும், முன்னாள் அதிமுக அவைத் தலைவரும், அரசவை கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86
எம்ஜிஆரின் தீவிர தொண்டராக இருந்தவர் புலவர் புலமைப்பித்தன் என்பதும் எம்ஜிஆரின் அன்புக்கு பாத்திரமாக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9.33 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில், அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்லநேரம், நினைத்ததை முடிப்பவன், பல்லாண்டு வாழ்க, நேற்று இன்று நாளை, நீதிக்கு தலைவணங்கு, மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் ,உலகம் சுற்றும் வாலிபன் உள்பட பல திரைப்படங்களில் அவர் பாடல் எழுதியுள்ளார்
அதேபோல் சிவாஜி கணேசன் நடித்த ‘சிவகாமியின் செல்வன், ரஜினிகாந்த் நடித்த தங்கமகன், பணக்காரன், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, நாயகன், பாக்யராஜ் நடித்த கன்னிப்பருவத்திலே, டார்லிங் டார்லிங் டார்லிங், இது நம்ம ஆளு, முந்தானை முடிச்சு உள்பட நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,.