எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி படங்களில் பணிபுரிந்த பழம்பெரும் இயக்குனர் காலமானார்: முதல்வர் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த படங்களிலும் கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்களிலும் பணிபுரிந்த பழம்பெரும் இயக்குனர் சொர்ணம் காலமானார்
தமிழ் திரை உலகின் பழம்பெரும் இயக்குனர்களில் ஒருவர் சொர்ணம். இவர் கருணாநிதி கதை வசனம் எழுதிய ’ஒரே ரத்தம்’ உட்பட ஒரு சில படங்களை இயக்கியிருந்தார். மேலும் இவர் எம்ஜிஆர் நடித்த தாயின் மடியில், நம்நாடு, கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில், ஒளிவிளக்கு, என் அண்ணன், குமரி கோட்டம், இதயவீணை, ராமன் தேடிய சீதை. பட்டிக்காட்டு பொன்னையா உள்ளிட்ட 11 படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார். இதில் சில படங்களில் எம்ஜிஆருடன் ஜெயலலிதாவுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த இயக்குனர் சொர்ணம் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. இயக்குனர் சொர்ணம் மறைவு குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
திரைப்பட இயக்குனரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணத்தின், திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு தி.மு.க.வின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கருணாநிதியின் முதல் பிள்ளையான முரசொலி உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் ஒருவரான இவர் ஆரம்ப கால துணையாசிரியராக இருந்து “பிறை வானம்” என்ற தொடரை முரசொலியில் எழுதியவர். மாணவப் பருவத்திலேயே கருணாநிதியால் கூர்மைப்படுத்தப்பட்ட சொர்ணம், சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் அடங்கிய “விடைகொடு தாயே” என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் தி.மு.க.வின் கொள்கைகளை பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர். கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நாடகம் தி.மு.க. மாநாடுகளில் நடத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் 17 படங்களுக்கு உரையாடல் தீட்டிய அவர், கருணாநிதி எழுதிய “ஒரே ரத்தம்” எனும் திரைப்படம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். நான் நடத்திய “இளைய சூரியன்” வார ஏட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி தலைவர், தமிழ்நாடு திரைப்படப் பிரிவு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி- கலை இலக்கிய பணிக்கு பெருமை சேர்த்தவர்.
முரசொலியில் ஞாயிறு தோறும் வெளிவந்த “புதையல்” இதழின் முழுப் பொறுப்பையும் ஏற்று, கருணாநிதியின் எழுத்தோவியங்களை என்றும் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலமாக்கியவர். கலைஞர் விருது வழங்கி கவுரவப்படுத்தப்பட்டவர். எழுத்தாளர், இயக்குனர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளராக திகழ்ந்த சொர்ணத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் முக ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments