தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞர் பாலுமகேந்திரா. நினைவு தின சிறப்பு கட்டுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
'ஒரு படைப்பாளிக்கு அடிப்படை தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்து கொண்டிருக்கும். ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது'. படைப்பாளிகள் குறித்து பழம்பெரும் இயக்குனர் பாலுமகேந்திரா கூறிய புரட்சிகரமான கருத்து. தமிழ் சினிமாவில் பாலுமகேந்திராவுக்கு இணையாக இன்றும் ஒருவர் கூட இல்லை என்பது தான் இவரது சிறப்பு. இத்தகைய சிறப்பு பெற்ற பாலுமகேந்திராவின் நினைவு நாளான இன்று அவரை பற்றி பகிர்வதில் பெருமை அடைகிறோம்
இலங்கையில் தமிழ் குடும்பத்தில் பிறந்த பலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா பள்ளிப்பருவத்தில் இருந்தே சினிமாவின் மீது காதல் கொண்டவர். இலங்கை வானொலியில் பணிபுரிந்து கொண்டிருந்த அவர் தன்னுடைய வேலையில் திருப்தி ஏற்படாததால் இந்தியாவிற்கு வந்து புனே திரைப்பட கல்லூரியில் ஒளீப்பதிவு படிப்பு படித்து தங்க மெடல் பெற்றார்.
1971ஆம் ஆண்டு 'நெல்லு' என்ற மலையாள படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற கேரள அரசின் விருதினை பெற்றார். பின்னர் தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்' தொடங்கி பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
1979ஆம் ஆண்டு 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனரானார். தொடர்ந்து மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால், ரெட்டை வால் குருவி, வீடு, வண்ண வண்ண பூக்கள், மறுபடியும், சதி லீலாவதி, உள்பட பல வெற்றி படங்களை இயக்கினார். கமல்ஹாசனுக்கு இன்றளவும் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் 'மூன்றாம் பிறை' மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, கமல்ஹாசனுக்கு முதல் தேசிய விருதையும் பெற்று தந்தது.
வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள் ஆகிய மூன்று படங்களுக்காக சிறந்த இயக்குனர் என்ற தேசிய விருதையும், மூன்றாம் பிறை, கோகிலா ஆகிய இரு படங்களுக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் பெற்றவர்.
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா", "பிதாமகன்" போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். மேலும் சீனுராமசாமி, ராம், வெற்றி மாறன், ஆகிய முன்னணி இயக்குனர்கள் பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர்கள்தான்
தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞரான பாலுமகேந்திரா கடந்த 2014ஆம் ஆண்டு இதே தினத்தில்தான் இந்த உலகை விட்டு மறைந்தார். தனது கலையுலக வாரிசுகளாக இளம் தலைமுறை இயக்குனர்களையும் ஒளிபதிவாளர்களையும் அவர் தமிழ் சினிமாவிற்கு விட்டு சென்றுள்ளதால் இன்னும் பாலுமகேந்திராவின் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் உணர்வு அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. பாலு மகேந்திரா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் இயக்கிய காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் என்றும் அவர் பெயரை சினிமாவில் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments