பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!
- IndiaGlitz, [Monday,November 21 2022]
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் வெளியான திரைப்படங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்கள் வரை ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார். இதனையடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிவாஜி கணேசன் நடித்த ’பாசமலர்’ ’பார்த்தால் பசி தீரும்’ ’படித்தால் மட்டும் போதுமா’ ’அன்னை இல்லம்’ ’பார் மகளே பார்’ ’புதிய பரவை’ உள்ளிட்ட பல படங்களுக்கும் அதேபோல் எம்ஜிஆர் நடித்த ’தாய் சொல்லை தட்டாதே’ ’குடும்பத்தலைவன்’ ’தாயைக் காத்த தனயன்’ ’நீதிக்கு பின் பாசம்’ ’பரிசு’ ’தொழிலாளி’ உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் வசனகர்த்தா ஆரூர்தாஸ்.
அதேபோல் ரஜினிகாந்த் நடித்த ’வணக்கத்துக்குரிய காதலியே’, ‘விடுதலை, கமல்ஹாசன் நடித்த ’மங்கம்மா சபதம்’ மோகன் நடித்த ’விதி’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார். இவர் கடைசியாக வசனம் எழுதியது வடிவேலு நடித்த ’தெனாலிராமன்’ என்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது நிலையில் வயது முதிர்வு காரணமாக வசனகர்த்தா ஆரூர்தாஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 91. அவரது ஆன்மா சாந்தி அடைய திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.