'ராக்கெட்டரி' படத்தில் பணிபுரிந்த கே.பாலசந்தர் பட நடிகை: இவருடைய பாட்டியும் நடிகைதான்!

  • IndiaGlitz, [Wednesday,July 06 2022]

நடிகர் மாதவன் நடித்து தயாரித்து இயக்கிய ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் பழம்பெரும் நடிகை ஒருவரின் பேத்தியும், கே பாலச்சந்தர் உள்பட பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்த நடிகையும் பணிபுரிந்துள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி என்பவர் ஒரு மிகச் சிறந்த நடிகை என்பதும், கே பாலச்சந்தர் இயக்கிய ’ஒரு வீடு இரு வாசல்’ படம் உள்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்டரி’ திரைப்படத்தில் தொழில்நுட்ப கலைஞராக வைஷ்ணவி பணிபுரிந்துள்ளார். இந்த படம் தமிழ், ஆங்கிலம், இந்தி என பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கு பல மொழிகளில் உள்ள வசன உச்சரிப்பு மற்றும் பாடி லாங்குவேஜ் ஆகியவற்றை கவனித்து கொள்ளும் சூபர்வைசர் பணி நடிகை வைஷ்ணவிக்கு கொடுக்கப்பட்டது.

வைஷ்ணவிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி உட்பட பல மொழிகள் தெரியும் என்பதால் இந்த பணியை அவர் தனது கணவரின் உதவியுடன் சிறப்புற செய்து கொடுத்துள்ளார். இந்த பணிக்காக மும்பையில் அவர் மூன்று வருடங்கள் கணவருடன் தங்கியுள்ளதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பின்போது நடிகர்களின் லாங்குவேஜ் மற்றும் பாடி லாங்குவேஜ் சார்ந்த விஷயங்களை நாங்கள் கவனித்துக் கொண்டோம் என்றும் நாங்கள் திருப்தி என்று சொன்னால் மட்டுமே அந்த ஷாட் ஓகே என்று மாதவன் சொல்வார் என்றும் அந்த அளவுக்கு எங்களுக்கு அவர் முழு சுதந்திரம் கொடுத்து இருந்தார் என்றும் நடிகை வைஷ்ணவி கூறியுள்ளார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த தன்னை தன்னுடைய குடும்ப நண்பரான மாதவன்தான் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்துள்ளார் என்றும் அவர் கொடுத்த பணியை நாங்கள் திருப்தியாக செய்து கொடுத்துள்ளோம் என்றும் நடிகை வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.