உங்களுக்கு ஞாபகம் இருக்கா பாலு? எஸ்பிபி குறித்த மலரும் நினைவுகளை பகிந்த பழம்பெரும் நடிகர்!
- IndiaGlitz, [Tuesday,August 18 2020]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறது.
மேலும் எஸ்பிபி அவர்களுடன் பணிபுரிந்த மலரும் நினைவுகளையும் பலர் தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பழம்பெரும் நடிகரும் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர்களின் தந்தையுமான சிவகுமார், எஸ்பிபியுடனான மலரும் நினைவுகள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
பாலு, என்னைவிட நீங்கள் 4 வயது சின்னவர். அதனால் உங்களை நான் தம்பி என்று அழைக்கின்றேன். உலகமே கொண்டாடக்கூடிய ஒப்பற்ற பாடகர் நீங்கள். நிறைகுடம். நூற்றுக்கும் மேலான படங்களில் எனக்காக நீங்கள் பாடி இருக்கிறீர்கள். முதன் முதலில் எனக்கு நீங்கள் எந்த படத்திற்கு பாடினீர்கள் என்று ஞாபகம் இருக்கின்றதா? ’மூன்று தெய்வங்கள்’ என்ற படத்திற்காக தான் நீங்கள் எனக்காக பாடினீர்கள். அதற்கு பிறகு நீங்கள் பாடிய பாடல் அனைத்தும் உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாடல்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக என்னால் மறக்கவே முடியாதது என்னவெனில் என்னுடைய நூறாவது படத்திற்காக நீங்கள் பாடிய ‘மாமன் ஒருநாள் மல்லிகைப்பூ கொடுத்தான்’ என்ற பாடலும், அதன் பின்னர் ’உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ பச்சைக்கிளி’ என்ற பாடலும் தான். இந்த பாடலுக்கு நீங்கள் கொடுத்த ஏமோஷனலை திரைக்கு கொண்டு வந்து நடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன்.
எத்தனையோ சவால்களை சந்தித்து நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். கொரோனாவும் ஒரு சவால் தான். அதையும் சமாளித்து சீக்கிரமாக நீங்கள் மீண்டு வாருங்கள். இவ்வாறு நடிகர் சிவகுமார் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கா பாலு?
— IndiaGlitz - Tamil (@igtamil) August 18, 2020
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடனான நினைவுகளை பகிர்ந்த சிவகுமார் ❤️❤️❤️#SPBalasubramanyam #sivakumar pic.twitter.com/b2i43i8qKD