'வெண்ணிலா கபடிக்குழு 2: கபடிக்காட்சிகளில் திருப்தி
கோலிவுட் திரையுலகில் வெளிவரும் பல இரண்டாம் பாக படங்களில் டைட்டிலை தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லாத நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் கதையுடன் ஒட்டிய படமாக இந்த 'வெண்ணிலா கபடிக்குழு 2' திரைப்படம் வெளிவந்துள்ளது ஒரு திருப்தியை அளிக்கின்றது
கபடி வெறியரான பசுபதி, பல போட்டிகளில் வெற்றி பெற்று ஊருக்கு நல்ல பெயரை வாங்கி தருகிறார். ஒரு முக்கிய போட்டியில் தனது மகனை பாதுகாக்க விளையாட முடியாமல் போகிறது. அதனால் ஊர்க்காரர்களின் பழிச்சொல்லுக்கு ஆளாகி ஊரைவிட்டே வெளியேறுகிறார். இருப்பினும் பல வருடங்கள் கடந்தும் கபடி மீது அவருக்குள்ள ஆர்வம் குறையவில்லை. இந்த நிலையில் பசுபதியின் மகன் விக்ராந்த், கபடியின் மீது எந்தவித ஆர்வமும் இல்லாமல் இருந்தாலும், அப்பாவின் ஆசையை தீர்க்க களமிறங்குகிறார். அவர் எடுத்து கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
விக்ராந்த் கதையின் நாயகனாக இருந்தாலும் அவருக்கு நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் மிகக்குறைவு. இடைவேளை வரை நாயகியை துரத்தி துரத்தி ரொமான்ஸ் செய்வதிலேயே அவரது கேரக்டர் முடிந்துவிடுகிறது. அதன்பின் அப்பாவின் பிளாஷ்பேக் தெரிந்தவுடன் களமிறங்கி அசத்துவார் என்று பார்த்தால் இரண்டாம் பாதியிலும் சுமார்தான். விக்ராந்த் இன்னும் ஒரு சராசரி ஹீரோ இமேஜை தாண்டவில்லை
ஒரு திரைப்படம் என்றால் அதற்கு நாயகி வேண்டும். அந்த இடத்தை மட்டும் நிறைவு செய்துள்ளார் நாயகி அர்த்தனா பானு. முதல் பாகத்தில் காதலும் கபடியும் ஒன்றுக்கு ஒன்று இணைந்த காட்சிகள் கடைசி வரை வரும். ஆனால் இந்த படத்தில் காதல் தனியாகவும், கபடி தனியாகவும் இருப்பதால் நாயகியின் நடிப்பு நிறைவாக இருந்தாலும் கதையுடன் ஒன்றி ரசிக்க முடியவில்லை. இரண்டு டூயட் பாடல்கள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது
பசுபதியின் நடிப்பு வெகு அபாரம். ஒரு அப்பாவாகவே வாழ்ந்துள்ளார். ஒவ்வொரு அப்பாவுக்கும் உள்ள ஏக்கத்தை அப்படியே தனது நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். ஆக்சன் காட்சியிலும் அசத்தியுள்ளார். இவ்வளவு அருமையான ஒரு நடிகரை தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது சினிமாவுக்குத்தான் இழப்பு
கிஷோரின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பையும் ரசிக்க முடிகிறது. முதல் பாகம் அளவுக்கு அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் கொடுத்த கேரக்டரை மிக அருமையாக தனது நடிப்பால் மெருகேற்றியுள்ளார்.
சூரியின் காமெடியில் நீண்ட இடைவெளிக்கு பின் ஓரளவு ரசிக்க முடிகிறது. அவரது ஃபேவரேட் புரோட்டா காட்சியும் இந்த படத்தில் உண்டு. அப்புக்குட்டி உள்பட முதல் பாகத்தில் இருந்த கபடி வீரர்கள் அனைவரும் இந்த படத்திலும் அதே உத்வேகத்துடன் நடித்துள்ளனர். கஞ்சா கருப்புவின் காமெடியில் கடும் வறட்சி. அருள்தாஸ், ரவிமரியா நடிப்பு ஓகே ரகம்
இசையமைப்பாளர் செல்வகணேஷின் இசையில் பாடல்கள் ரொம்ப சுமார். ஆனால் பின்னணி இசை ஓகே. குறிப்பாக கிளைமாக்ஸ் கபடிக்காட்சிகளில் பின்னணி இசை அருமை. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் திருவிழா காட்சிகள், கபடிக்காட்சிகள் ரசிக்கும் வகையில் உள்ளது.
சுசீந்திரனின் மூலக்கதையை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் செல்வசேகரன். முதல் பாதி முழுவதும் மெயின் கதைக்க்கு தேவையில்லாத காட்சிகளை அதிகம் வைத்துள்ளார். பசுபதியின் பிளாஷ்பேக் காட்சி மட்டும் நிமிர்ந்து உட்காரும் வகையில் உள்ளது. இரண்டாம் பாதியில் 'இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்' என்று டைட்டில் வந்தாலும் இரண்டாம் பாதியிலும் பாதிக்கு மேல்தான் கபடிக்கதை ஆரம்பிக்கின்றது. கிளைமாக்ஸ் கபடிக்காட்சிகளை மட்டும் திருப்தியாக அமைத்துள்ளதால் படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு திருப்தி மனதில் ஏற்படுகிறது. 'கபடி விளையாட தமிழன் என்ற ஒரு தகுதி போதாதா? உள்பட ஒருசில வசனங்கள் ரசிக்கும் வகையில் இருந்தது.
நாயகியின் காதல் காட்சிகள் உள்பட படத்தின் தேவையில்லாத காட்சிகளை தவிர்த்துவிட்டு, கபடி குறித்த காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகம் வைத்திருந்தால் ஒரு அருமையான ஸ்போர்ட்ஸ் படம் பார்த்த திருப்தி இருந்திருக்கும். மொத்தத்தில் படத்தில் வரும் கபடிக்காட்சிகளுக்காக இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம்
Comments