சென்னை மக்கள் 4 நாளும் பிரியாணி சமைக்க போறாங்களா? பிரபல இயக்குனர் கேள்வி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் மே 3அம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவுக்குள் ஒரு ஊரடங்காக நாளை முதல் நான்கு நாட்களுக்கு சென்னை, மதுரை, கோவை உள்பட 5 நகரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை அடுத்து காய்கறிகள் மளிகை கடையில் உள்பட எந்த கடைகளும் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை 6 மணி முதலே மக்கள் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் முன் பொதுமக்கள் குவிய ஆரம்பித்தனர். கூட்டம் அதிகமானதால் சமூக விலகலை கூட அவர்கள் கடை பிடிக்க வில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒரு செய்தியாகும்.

இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக நாளை முதல் வழக்கம்போல் காய்கறி கடைகள் இயங்கும் என்றும் மளிகைக்கடைகள் மட்டும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்குப் பின்னரும் கூட்டம் அதிகமாக கடைகளில் கூடி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’எதற்காக சென்னை மக்கள் இவ்வாறு பயந்துகொண்டு பொருட்களையெல்லாம் வாங்கிக் குவிக்கின்றார்கள்? இந்த நான்கு நாள் ஊரடங்கு உத்தரவில் பொருட்களை வாங்கிக் கொள்வததோடு இவர்கள் கொரோனா வைரஸையும் சேர்த்து வாங்கி விடுவார்கள் போலிருக்கிறதே. நான்கு நாட்களும் வீட்டில் பிரியாணியா சமைக்கப் போகிறார்களா? தயவுசெய்து அமைதியாக வீட்டில் இருங்கள். இதுவும் கடந்து போகும் என்று கூறியுள்ளார். வெங்கட்பிரபுவின் இந்த டுவீட் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.