ஓபிஎஸ் கருத்துக்கு வெங்கையா நாயுடு வெளிப்படையான ஆதரவு. சசிகலா அதிர்ச்சி
- IndiaGlitz, [Monday,February 13 2017]
முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு பாஜக பின்னணியில் இருந்து ஆதரவு வழங்கி வருவதாக பல கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில் ஓபிஎஸ் கூறிய கருத்து ஒன்றுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளிப்படையான ஆதரவு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவிடம் இருந்து கட்சியை கைப்பற்றுவது மட்டுமின்றி ஜெயலலிதாவின் 'வேதா இல்லத்தையும் கைப்பற்றி 'அம்மா நினைவு இல்லம்' அமைப்பேன் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறினார். அதுமட்டுமின்றி இதற்காக கையெழுத்து இயக்கத்தையும் அவர் ஆரம்பித்து முதல் கையெழுத்தையும் பதிவு செய்தார். முதல்வரின் இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, 'வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றும் யோசனையை வரவேற்வதாக கூறினார். வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றும் யோசனையை வரவேற்பதாகவும், தன்னை பொருத்தவரை இது ஒரு நல்ல விஷயம் என நினைப்பதாகவும் கூறினார். மேலும் வேதா இல்லத்திற்கு தற்போது வரை யாரும் உரிமை கோராத நிலையில், அதுகுறித்து அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், இந்த முடிவில் மத்திய அரசு ஏதும் தலையிடாது என்றும் அவர் தெரிவித்தார்.
வெங்கையா நாயுடுவின் இந்த கருத்தால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.