“நாம் இருவர் நமக்கு ஆறுபேர்” வெனிசுலா அதிபரின் புதிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,March 05 2020]

 


“நாம் இருவர் நமக்கு எதற்கு இன்னொருவர்“ என வளரும் நாடுகளில் புது வாசகம் சொல்லப் பட்டு வரும் நிலையில் வெனிசுலாவின் அதிபர் தன் நாட்டுப் பெண்கள் ஒவ்வொரும் 6 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாடு போன்ற விவகாரங்களுக்கு மத்தியில் அதிபர் இப்படி பேசியிருப்பது அந்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

வெனிசுலாவின் புதிய அதிபர் நிக்கோலஸ் மதுரோ பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்து பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறார். பெண்கள் சுகாதார திட்டத்தை ஊக்குவிப்பதற்காகத் தொலைக்காட்சியில் பேசிய அதிபர் வெனிசுலாவின் ஒவ்வொரு பெண்களும் தலா ஆறு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டின் நன்மையைக் கருதி பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார். மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப் பட இருக்கிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பு உலகம் முழுவதிலும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

வெனிசுலாவில் மொத்த மக்கள் தொகையில் 13% பேர் குழந்தைகள். 2013 – 2018 ஆம் ஆண்டுகளில் வெனிசுலாவில் குழந்தைகள் கடும் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டதாக ஐ.நா. வின் Unisef குறிப்பிட்டு இருக்கிறது. அந்நாட்டில் கடுமையான அரசியல் எதிர்ப்புணர்ச்சி நிலவி வரும் சூழலில் அதிபரின் கருத்து மேலும், பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்நாட்டின் தேசிய சட்ட மன்ற உறுப்பினர் மானுவேலா, “நாட்டில் மருத்துவ மனைகள் சரியாகச் செயல்பட வில்லை, தடுப்பூசி பற்றாக்குறை இருக்கிறது. பெண்கள் ஊட்டச் சத்து குறைபாட்டால் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மக்கள் கட்டாய இடப்பெயர்வினை எதிர்க் கொண்டு வருகினறனர். உளவியல் சிக்கல் உள்ள ஒருவரால் தான் இப்படி பேச முடியும்” எனக் கடுமையாக விமர்சித்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது.