Download App

Vendhu Thanindhathu Kaadu Review

வெந்து தணிந்தது காடு: சிம்பு-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஒரு கேங்ஸ்டர் கதை

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’விண்ணை தாண்டி வருவாயா’ மற்றும் ’அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் கொடுத்த நிலையில்து மீண்டும் அதே கூட்டணியில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ மேற்கண்ட இரண்டு படங்களை போல் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை தற்போது பார்ப்போம்.

முத்துவீரன் (சிம்பு) என்ற கிராமத்து பட்டதாரி இளைஞன் வறுமை காரணமாக தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலை தேடி மும்பை செல்கிறார். மும்பையில்  தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் வைத்திருக்கும் பரோட்டா கடையில் வேலை செய்கிறார். அப்போதுதான் அந்த கடையை நடத்துபவர் ஒரு கேங்ஸ்டர் கும்பலின் குழுவில் உள்ளவர் என்பது தெரியவருகிறது. இதனையடுத்து அந்த வாழ்க்கையில் இருந்து வெளியே வர முயற்சிக்கும் போது சில சூழ்நிலைகள் அவனை வெளியே விடாமல் தடுக்கின்றன. இதற்கிடையே முத்து ஒரு பெண் மீது காதலில் விழுந்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். முத்து ஒரு கேங்ஸ்டராக தொடர்ந்தானா? அல்லது அந்த பெண்ணை கைப்பிடித்து கேங்க்ஸ்டர் குழுவில் இருந்து வெளியே வந்தானா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே அவரது பெஸ்ட் நடிப்பை வெளிக்கொண்டு வந்த படம் ’வெந்து தணிந்தது காடு’ என்று கூறினால் அது மிகையாகாது. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை சிம்புவின் அற்புதமான நடிப்பை இயக்குனர் கவுதன் மேனன் வெளியே கொண்டு வந்துள்ளார். சிம்பு தனது முத்துவீரன் கேரக்டருக்காக உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் என்பதும், குறிப்பாக 19வயது முத்து  கேரக்டருக்காக அவர் தனது உடல் அளவில் மாறியது அவரது அபாரமான முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

நாயகி சித்தி இத்னானி முதல் பாதியில் சிம்புவுடன் காதல் டூயட் பாடினாலும், இரண்டாம்பாதியில் கதைக்கும் சிறிதளவு உதவுகிறார். மேலும் ராதிகா, அப்புக்குட்டி, நீரஜ் மற்றும் சித்திக் ஆகியோரை இன்னும் சிறப்பாக இயக்குனர் பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இயக்குனர் கௌதம் மேனன் முத்துவீரன் கேரக்டருக்கு ஆரம்பத்திலிருந்தே முக்கியத்துவம் கொடுத்து பார்த்து பார்த்து அந்த கேரக்டரை படத்தில் வளர்த்துள்ளார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இடைவேளையின்போது ஒரு எதிர்பாராத திருப்பம் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. முதல்பாதியில் முத்துவின் கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமாக வளரும்போது சுவராசியமாக சேர்ந்து வளர்கிறது. கௌதம் மேனன் தனது வழக்கமான பாணியில் இருந்து மாறி வித்தியாசமான ஒரு படத்தை கொடுக்க முயற்சித்ததும் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் முதல் பாதியில் உள்ள விறுவிறுப்பு மற்றும் உணர்ச்சிமயமான காட்சிகள் இரண்டாம் பாதியில் மிஸ் ஆகிறது. இதனால் இரண்டாம் பாதியில் படத்துடன் ஒன்றிணைய பார்வையாளர்கள் கஷ்டப்படுகின்றனர் என்பது தெரிகிறது. இரண்டாம் பாதியில் வழக்கமான யூகிக்கப்படும் காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.

மதுஸ்ரீயின் குரலில் உருவான ‘மல்லிகை பூ’ என்ற பாடல், ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் உருவான ‘மறக்குமா நெஞ்சம்’, ஸ்ரேயா கோஷல் குரலில் உருவான ‘உன்ன நினைச்சதும்’ ஆகிய பாடல்கள் மூலம் ரசிகர்களை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கட்டி போடுகிறார்.

தொழில்நுட்ப ரீதியாக இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஏஆர் ரகுமானின் பின்னணி இசை, சித்தார்த்தின் ஒளிப்பதிவு, கலை இயக்குனரின் அற்புதமான செட்டுகள் ஆகியவை படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. தாமரையின் பாடல் வரிகளில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் ரசிக்கலாம். ஜெயமோகனின் வசனங்கள் இயல்பாக இருந்தாலும், இரண்டாம் பாதி கதையில் அவர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்களின் கடுமையான உழைப்புக்காக ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம்.

Rating : 3.0 / 5.0