நீட் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க மறுத்த வேலூர் சி.எம்.சி
- IndiaGlitz, [Wednesday,September 06 2017]
இந்த ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வின் அடிப்படையில் தான் சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இதற்கு தமிழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு போதுமான அக்கறையுடன் கூடிய கவனம் செலுத்தாததால் தமிழக மருத்துவகல்லூரிகளில் நீட் தேர்வின் அடிப்படையில் கவுன்சிலிங் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நீட் அடிப்படையில் மருத்துவ கல்விக்கு மாணவர்களை சேர்க்க முடியாது என்று வேலூர் சி.எம்.சி கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டதோடு, மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தியும் வைத்துள்ளது.
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், 5 ஆண்டு படிப்பை முடித்தவுடன் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்கு கீழ் உள்ள மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் நீட் தேர்வின் அடிப்படையில் சேரும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த காரணத்திற்காக இக்கல்லூரி மருத்துவ சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளது.
இதன் காரணமாக இந்த மருத்துவ கல்லூரியில் இதுவரை எம்பிபிஎஸ் படிப்புக்கும் மருத்துவ மேல்படிப்புக்கும் தலா ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கல்லூரி நிர்வாகத்தின் முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.