வெள்ளைப்பூக்கள்: தவறவிடக்கூடாத திரில்லர் பூக்கள்
பிரபல காமெடி நடிகர் விவேக் மீண்டும் முக்கிய வேடத்தில் நடித்த ஒரு படம் தான் 'வெள்ளைப்பூக்கள்". விவேக்-சார்லி கூட்டணியில் உருவாகியுள்ள இந்த த்ரில் சஸ்பென்ஸ் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்
அமெரிக்காவில் உள்ள மகன், தன்னுடைய அனுமதியின்றி காதல் திருமணம் செய்ததால் மகன், மருமகளுடன் கோபித்து கொண்டிருந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ருத்ரன் (விவேக்), பின்னர் மனம் மாறி தனது மகனை பார்க்க அமெரிக்கா செல்கிறார். அவருடைய வீட்டின் பக்கத்தில் உள்ளவர்களின் வீடுகளில் உள்ளவர்கள் திடீர் திடீரென காணாமல் போகின்றனர். அமெரிக்க போலீஸ் ஒரு பக்கம் இந்த வழக்கை துப்பறிந்தாலும், க்ரைம் ஸ்பெஷலிஸ்ட் ருத்ரன், தானும் தனியாக சார்லி உதவியுடன் துப்பறிகிறார். அப்போது இந்த தொடர் கடத்தலில் தன்னுடைய மகனும் கடத்தப்படுவதால் அதிர்ச்சி அடையும் விவேக், தன்னுடைய முழு துப்பறியும் அறிவை பயன்படுத்தி மகனை மீட்க எடுக்கும் நடவடிக்கைகளும், மகன் உள்பட தொடர் கடத்தல் ஏன்? கடத்தியது யார்? என்ன காரணம் என்பதும்தான் இந்த படத்தின் மீதிக்கதை
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு ஓரளவுக்கு பொருந்துகிறார் விவேக். தொடர் கடத்தலை துப்பறிவது, மகனிடம் பாசம் காட்டி மருமகளை ஒதுக்குவது, ஒரு கட்டத்தில் மருமகளையும் ஏற்றுக்கொள்வது என பாசம், கடமை என தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார் விவேக். மகன் கடத்தப்பட்ட நிலையில் வழக்கும் தனது கையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் கதறியழும் காட்சி, விவேக்கிற்குள் இப்படியொரு குணச்சித்திர நடிகனா என்று வியக்க வைத்தது. சார்லியுடன் அவர் தனது கண்டுபிடிப்புகளை டிஸ்கஸ் செய்வது, கற்பனையில் விசாரணை செய்வது போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதிது. சினிமா ஹீரோத்தனம் இன்றி விவேக் கேரக்டர் அமைந்திருப்பதும் பாராட்டுக்குரிய ஒரு அம்சம்
விவேக் கூடவே டிராவல் செய்யும் பாரதி கேரக்டரில் சார்லி. ஓரிரண்டு காட்சிகள் தவிர இவரை படக்குழுவினர் அதிகம் பயன்படுத்தவில்லை. காமெடி இந்த படத்திற்கு தேவையில்லை என்பதால் சார்லியையும் கொஞ்சம் சீரியஸாகவே காண்பித்துள்ளனர். விவேக் மகனாக அஜய் கேரக்டரில் நடித்திருக்கும் தேவ், அவரது வெள்ளைக்காரி மனைவியாக நடித்திருக்கும் ஹாண்டர்சன் ஆகியோர்களின் நடிப்பில் செயற்கைத்தனம் இல்லை என்பதால் ரசிக்க முடிகிறது. பூஜா தேவரியா கேரக்டர் பார்வையாளர்களின் ஊகங்களுக்கு மட்டும் உதவுகிறது.
ராம்கோபால் கிருஷ்ணராஜூவின் பின்னணி இசை மிக அருமை. ஒரு த்ரில் படத்திற்கு தேவையான இசை கச்சிதமாக உள்ளது. ஜெரால்ட் பீட்டரின் ஒளிப்பதிவில் அமைதியான அமெரிக்க பகுதிகளை அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இப்படி ஒரு தனிமையான, அழகான லொகேஷன்களா? என ஆச்சரியப்பட வைக்கின்றது. குறிப்பாக அந்த அணு உலையை படம் பிடித்த விதம் சூப்பர். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு கச்சிதம். தேவையான காட்சிகள், இரண்டு மணி ரன்னிங் டைம் ஆகியவை இந்த படத்தின் பிளஸ்களில் ஒன்று
கிட்டத்தட்ட 'வேட்டையாடு விளையாடு' போன்ற கதை. ஆனால் இதில் துப்பறிபவர் ஒரு ஓய்வு பெற்ற வயதான போலீஸ் என்பவதால் ஆக்சன் காட்சிகளை தவிர்த்துள்ளார் இயக்குனர். அமெரிக்க போலீஸை விட புத்திசாலித்தனமாக யோசிக்கும் கேரக்டர் என விவேக் கேரக்டரை வடிவமைத்துள்ள இயக்குனர் விவேக் இளங்கோவன், அதற்குரிய காட்சிகளையும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக வைத்திருந்தால் நம்பும்படி இருக்கும். வில்லனை விவேக்கும், சார்லியும் நீண்ட நேரம் துரத்துவதும், வில்லனிடம் மாட்டிக்கொண்ட இருவரையும் போலீஸ் வந்து காப்பாற்றுவதிலும் கொஞ்சம் செயற்கைத்தனம் தெரிகிறது.
இருப்பினும் படத்தின் மிகப்பெரிய பிளஸ் குற்றவாளி யார்? என்பதை யாராலும் ஊகிக்க முடியாதவாறு அமைத்த திரைக்கதை தான். ஒரு துப்பறியும் நாவலாசிரியர் இந்த படத்தை பார்த்தால் கூட அவரால் கூட ஊகிக்க முடியாத கிளைமாக்ஸ். அதோடு படத்தின் கதையோடு டைட்டிலான வெள்ளைப்பூக்களை இணைத்தது சரியான புத்திசாலித்தனம். அமெரிக்காவை நன்கு தெரிந்தவர்கள் மட்டுமே இதனை செய்ய முடியும். பாடல்கள், காமெடி என படத்தின் கதையை திசை திருப்பாமல் சொல்ல வந்ததை கச்சிதமாக சொல்லியுள்ள இயக்குனர் விவேக் இளங்கோவன் உள்ளிட்ட படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்கள். மேலும் இந்த படத்தில் இரண்டு கதைகள் தனித்தனியாக சொல்லப்பட்டு அந்த இரண்டு கதைகளையும் சரியாக ஒரு புள்ளியில் இணைத்த இயக்குனரின் புத்திசாலித்தனம், இனிமேல் த்ரில் படம் இயக்குபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு அம்சம்.
கடைசியில் கூறியுள்ள மெசேஜ் இந்த காலத்திற்கு முற்றிலும் ஏற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.
மொத்தத்தில் 'வெள்ளைப்பூக்கள்" திரில்லர் கலந்த சமூகவிழிப்புணர்வு படம் என்பதால் அனைவரும் பார்க்க வேண்டிய படம்
Comments