'விஐபி 2' - திரைவிமர்சனம் - எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சீக்வல்
வெற்றிபெற்ற படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுப்பதில் ஒரு மிகப் பெரிய சவாலும் சாதகமும் உண்டு. முதல் படத்தின் விளைவாய் ஏற்பட்ட எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். என்பது சவால். ஆனால் ஏற்கனவே போடப்பட்ட ஒரு வெற்றிப் பாதை இருப்பது சாதகம். அதேபாதையில் கவனமாகப் பயணித்தால் போதும். ஆனால் பழையதைப் பார்ப்பதுபோன்ற உணர்வைத் தவிர்க்க வேண்டும். 2014ல் மிகப் பெரிய வெற்றிபெற்ற ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘விஐபி 2’ முதல் பாகத்தின் அனைத்து சாதகங்களையும் சரியாக உள்வாங்கி இந்த சவாலை பெருமளவில் வெற்றிகரமாக நிறைவேற்றுகிறது.
முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து ஒரு ஆண்டு கழித்து தொடங்குகிறது கதை. ரகுவரன் இப்போது ஒரு வெற்றிகரமான கட்டிடப் பொறியாளர். காதலி ஷாலினி (அமலா பால்) இப்போது மனைவியாகிவிட்டாள். அதோடு ரகுவரனின் அம்மாவின் இடத்தில் இருந்து குடும்பப் பொறுப்பை கவனிக்கிறாள்.
அந்த ஆண்டுக்கான சிறந்த பொறியாளருக்கான விருதை வாங்குகிறான் ரகுவரன். அதே விருது விழாவில் கட்டிடக் கலைத் துறைக்கான மற்ற அனைத்து விருதுகளையும் பெறுகிறது தென்னிந்தியாவின் மிகப் பெரிய கட்டிடக் கலை நிறுவனமான வசுந்தரா கன்ஸ்ட்ரகஷன்ஸ். அதன் உரிமையாளரும் சிறந்த கட்டிடக் கலைஞருமான வசுந்தரா (கஜோல்) தனிப் பெண்மணியாக சொந்த உழைப்பாலும் திறமையாலும் முன்னேறியவள்.
ரகுவரனை தன் நிறுவனத்தில் பணியாற்ற அழைக்கிறாள் வசுந்தரா. ஆனால் தனக்கு முதன் முதலாக வேலையளித்த அனிதா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திலேயே இருக்க விரும்பும் ரகுவரன் அதை மறுக்கிறான்.
ஒரு மிகப் பெரிய ப்ராஜக்ட் வசுந்தராவுக்கு பதிலாக ரகுவரனின் முயற்சியால் அவனது நிறுவனத்துக்குக் கிடைத்துவிடுகிறது. இதை ஒரு கவுரவப் பிரச்சனையாக எடுத்துக்கொள்ளும் வசுந்தரா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த ப்ராஜக்டை தன் வசமாக்கிக்கொள்கிறாள். அதோடு ரகுவரனைப் பழிவாங்க முடிவுசெய்து அவன் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறாள். இதனால் அந்த வேலையை விட்டுவிட்டு மீண்டும் வேலை இல்லா பட்டதாரி ஆகிறான் ரகுவரன்.
அதன் பிறகு அவனை போன்ற விஐபி பொறியாளர்களுடன் சேர்ந்து தன் சொந்த நிறுவனத்தைத் தொடங்குக முயல்கிறான். ஆனால் அதற்கான பணம் அவனிடம் இல்லை.
ரகுவரனின் லட்சியம் நிறைவேறியதா? அதில் அவன் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? அவனைத் தன்னிடம் அடிபணிய வைக்கும் வசுந்தராவின் முயற்சி வென்றதா? இதையெல்லாம் தெரிந்துகொள்ள திரையரங்கில் சென்று படத்தைப் பாருங்கள்.
தனுஷ் கதை-வசனத்தில், சவுந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை-இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விஐபி 2’ முதல் பாகத்தைப் போலவே பொழுதுபோக்குக்கும் ரசனைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. கதையில் புதியதாக ஒன்றும் இல்லை. திரைக்கதையும் ஊகிக்கக்கூடிய பாதையிலேயே பயணிக்கிறது. முதல் பாகத்தில் நிகழ்வுகளில் ஒரு இயல்புத்தன்மை இருந்தது இதில் அது குறைவுதான். ஆனாலும் முதல் பாகத்தில் இருந்த மாஸ் தருணங்கள், குடும்ப செண்டிமெண்ட், காதல், காமடி, நட்பு என அனைத்தையும் கொடுத்து அதோடு சேர்ந்து ஒரு சமூக சிந்தனை அம்சத்தையும் ஒரு வலுவான பெண் நாயக-எதிர் கதாபாத்திரத்தையும் சேர்த்து படத்தை பெருமளவில் ரசிக்க வைத்துவிட்டனர்.
வசனங்களில் தனுஷின் எழுத்துத் திறமை பல இடங்களில் பலிச்சிடுகிறது. மாஸ் காட்சிகளில் பஞ்ச் வசனங்களுக்கு பதிலாக திருக்குறளைப் பயன்படுத்தியிருக்கும் விதம் மிக அழகு.
’கோச்சடையான்’ என்ற பரீட்சார்த்த முயற்சிக்குப் பிறகு வழக்கமான கமர்ஷியல் மாஸ் படத்தை இயக்கியிருக்கும் சவுந்தர்யா இதில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்துள்ளார். பளிச்சென்ற காட்சிகள், கண்கவர் செட்கள், எந்த நடிகரின் நடிப்பிலும் குறைசொல்ல முடியாமல் இருப்பது என ஒரு இயக்குனராகத் தன் பணியை சிறப்பாகச் செய்துள்ளார். குறிப்பாக கஜோலின் உதட்டசைவும் அவருக்குப் பின்னணி குரல் கொடுத்திருப்பவரின் குரல் ஒலியும் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்திருக்கிறார். பல இயக்குனர்கள் கோட்டைவிடும் இடம் இது.
அதேபோல் கதாபாத்திர வார்ப்பில் சில கவனித்துப் பாராட்டத்தக்க அம்சங்கள் உள்ளன. ஒரு காட்சியில் வசுந்தரா ரகுவரனைக் கடந்து செல்லும்போது அவனைக் கண்டுகொள்ளாததுபோல் செல்வாள், அருகில் நிற்கும் அவனது முதலாளிக்கு “குட்மார்னிங்” என்று தானாகவே சொல்லிவிட்டுப் போவாள். இந்த ஒரு சின்ன விஷயம் வசுந்தரா பாத்திரத்தின் மனப்பான்மையை அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. அதேபோல் முதல் பாகத்தில் பாதியிலேயே இறந்துவிட்ட ரகுவரனின் அம்மா (சரண்யா பொன்வண்ணன்) இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.
ஆனால் குடும்ப உறவுகள் குறித்த காட்சிகளை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம். அதீத அக்கறையால் ரூல்ஸ் பேசி சண்டைபோட்டுக்கொண்டே இருக்கும் மனைவி அதனால் கணவனுக்கு ஏற்படும் இன்னல் என்ற பழகிய பாதையிலேயே அக்காட்சிகள் பயணிப்பதால் குறிப்பிட்டுசொல்ல ஒன்றும் இல்லை.
அதேபோல் இரண்டாம் பாதியின் திருப்பங்கள் சிலவற்றில் லாஜிக் மீறல் அதிகம். ஆனால் கடைசி 15 நிமிட நிகழ்வுகள் எதிர்பாராத வகையில் அமைந்து ஆச்சரியமூட்டுகின்றன. அந்த மாற்றத்தை ரசிக்கவும் முடிகிறது. எனவே படம் நல்ல பாதையில் நிறைவடைகிறது.
அனைவராலும் விரும்பப்படும் ரகுவரன் பாத்திரத்தின் ஜாலத்தை மீண்டும் அதே அழகுடன் திரையில் காட்டிவிட்டார் தனுஷ். மாஸ் காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் அவரது முகபாவங்கள், உடல்மொழி, வசன உச்சரிப்பு அனைத்தும் சிறப்பு. அமலா பாலுக்கு முதல் பாகத்தைவிட அதிக வலுவான வேடம். கொடுத்த வேலையை அர்ப்பணிப்புடன் செய்திருக்கிறார். அன்பும் அக்கறையும் நிறைந்த அப்பாவாக சமுத்திரக்கனி பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். விவேக் சில பல இடங்களில் சிரிப்பு வெடிகளைக் கிள்ளிப்போடுகிறார். எமோஷனல் தருணங்களிலும் அழகாக ஸ்கோர் செய்கிறார்.
ஒரு விஷயத்துக்காக ‘விஐபி 2’ படக்குழுவினர் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம். இந்தப் படத்தில் காஜோல் என்ற பாலிவுட் கனவுக்கன்னி வெறுமனே ஒரு ஈர்ப்புக்காக மட்டும் சேர்க்கவில்லை. அப்படி ஒரு அழகும் திறமையும் அனுபவமும் வாய்ந்த நடிகைக்கு ஏற்ற வலிமையான பாத்திரம் தரப்பட்டிருக்கிறது. அவரும் அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். கஜோலுக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம் என்று சொல்லும் அளவுக்கு. அதோடு படப்பிடிப்பின்போது அனைத்து தமிழ் வசனங்களையும் அவரே பேசி நடித்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. அந்த மெனக்கெடலுக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து. மொத்தத்தில் கோலிவுட்டில் ’மின்சாரக் கனவு’ நாயகியின் மறவரவு நல்வரவாக அமைந்திருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசை பல இடங்களில் காட்சிக்கு வேண்டியதை சரியாகத் தந்திருக்கிறது. முதல் பாகத்துக்கான அநிருத்தின் தீம் மியுசிக்கும் சில பின்னணி இசைத் துணுக்குகளும் அளவாகவும் அழகாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சமீர் தஹிரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு இனிமையான காட்சி அனுபவத்தைத் தந்துள்ளது. பிரசன்னா ஜி.கேயின் படத்தொகுப்பு கச்சிதம், அனல் அரசின் சண்டைக் காட்சிகள் படத்தின் மாஸ் அம்சத்துக்கு வலு சேர்க்கின்றன.
மொத்தத்தில் நம் அனைவருக்கும் பிடித்த ரகுவரன், வலிமையும் வசீகரிக்கும் வசுந்தரா, மாஸ் மற்றும் குடும்ப அன்பை விவரிக்கும் காட்சிகள், விவேக்கின் காமடி ஆகியவற்றால் ரசிகர்களை திருப்திபடுத்தும் படமாக அமைந்திருக்கிறது ‘விஐபி 2’.
Comments