Download App

Velaikkaran Review

'வேலைக்காரன்':   சமூக மாற்றத்திற்கு முதல் விதை

இயக்குனர் மோகன்ராஜா ரீமேக் படங்களை மட்டும் இயக்கி வந்த நிலையில் அவர் முதன்முதலில் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய 'தனி ஒருவன்' திரைப்படம் மிகப்பெரிய சமூக கருத்துடன் கூடிய ஒரு வெற்றிப்படமாக அமைந்ததால் அவருடைய அடுத்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதிலும் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பதால் எதிர்பார்ப்பின் சதவீதம் அதிகரித்தது. இந்த நிலையில் ரசிகர்களை முழு திருப்தி அடையும் அளவிற்கு இந்த 'வேலைக்காரனை' அவர் உருவாக்கியுள்ளாரா? என்பதை தற்போது பார்ப்போம்

சென்னையின் அடித்தட்டு மக்கள் வாழும் ஒரு குப்பத்து பகுதி கொலைக்காரக்குப்பம். இங்கு தாதாவாக இருக்கும் பிரகாஷ்ராஜ், குப்பத்து இளைஞர்களை தனது சுயலாபத்திற்காக அடியாட்களாக வைத்துள்ளார். அந்த பகுதி மக்களை மிரட்டியும், அன்பு காட்டியும், கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்தும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த குப்பத்தில் வாழும் சிவகார்த்திகேயன், குப்பத்து இளைஞர்களை பிரகாஷ்ராஜிடம் இருந்து மீட்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதே நேரத்தில் பிரகாஷ்ராஜை எதிர்க்கவும் அவரால் முடியாது. இந்த நிலையில் ஒரு எப்.எம். ரேடியோ ஆரம்பித்து அதன் மூலம் அந்த பகுதி இளைஞர்களை மாற்ற முயல்கிறார். இதை அறிந்து கொண்ட பிரகாஷ்ராஜ், இனிமேல் ரேடியோ நடத்தக்கூடாது என்று கூறியதால் வேறு வழியின்றி கார்ப்பரேட் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலைக்கு செல்கிறார்.

அங்கு உயரதிகாரி பகத்பாசில் துணையுடன் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ளும் சிவகார்த்திகேயன், தனது நண்பர் விஜய்வசந்த்தையும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து கொள்கிறார். பிரகாஷ்ராஜிடம் இருந்து விஜய்வசந்த் பிரிந்து சென்றதால் அவரை கொலை செய்யும் பிரகாஷ்ராஜை, அவரது தொழில் எதிரி கத்தியால் குத்திவிடுகிறார். அதை பார்க்கும் சிவகார்த்திகேயன், சுயலாபத்திற்காக இதுவரை குப்பத்து இளைஞர்களை அடியாளாக வைத்திருந்த உனக்கு இது சரியான தண்டனை தான் என்று கூறுகிறார். ஆனால் உண்மையில் நான் கூலிப்படை இல்லை, நீதான் கொலைகாரன் என்றும், அது எப்படி என்றும் சிவகார்த்திகேயனுக்கு விளங்க வைத்து, தான் கூலி வாங்கிக்கொண்டு செய்யும் கொலைகளை நீ சம்பளம் வாங்கிக்கொண்டு செய்கிறாய்? என்று கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடியை கூறுகிறார். அப்போதுதான் தான் திருத்த வேண்டியது இந்த குப்பத்தை அல்ல, ஒட்டுமொத்த சமூகத்தை என்று முடிவு செய்யும் சிவகார்த்திகேயன் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள், அவருக்கும் அவருக்கு எதிராக திரும்பும் பகத்பாசிலுக்கும் இடையே நடைபெறும் ஆடுபுலி ஆட்டம்தான் இரண்டாவது பாதிக்கதை

இதுவரை ஜாலியாக பக்கத்துவீட்டு பையன் போல், காமெடி, ரொமான்ஸ் நாயகனாக வலம் வந்த சிவகார்த்திகேயன் முதன்முதலாக கிட்டத்தட்ட படம் முழுக்க சீரியஸான கேரக்டரில் நடித்துள்ளார். முதல் பாதியில் மட்டும் ஒருசில காமெடி காட்சிகளுடன் கூடிய அவருடைய கேரக்டர் அதன் பின்னர் சீரியஸாக மாறிவிடுகிறது. அவருடைய நடிப்பில் பல இடங்களில் முதிர்ச்சி தெரிகிறது.  பகத் பாசிலிடம் மார்க்கெட்டிங் தொழிலை கற்றுக்கொள்வது, நயன்தாராவை தனது கொள்கையை நிறைவேற்ற கூடவே இருக்க சொல்வது, கார்ப்பரேட் உலகின் கொடூரங்களை தோலுரிக்க முயற்சி எடுப்பது என படம் முழுவதும் சிவகார்த்திகேயன் சீரியஸ் கார்த்திகேயனாக உள்ளார்

அறம் போன்ற முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்த நயன்தாரா இந்த படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. இந்த படத்தில் நயன்தாரா காட்சிகளை முழுவதும் நீக்கிவிட்டால் கூட படத்தின் மெயின் கதைக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. ஆனால் அதே நேரத்தில் ஒரு பெரிய சூப்பர் ஸ்டாரை படத்தில் கமிட் செய்துவிட்டோம் என்பதற்காக நயன்தாராவுக்கு அதிக காட்சிகள் கொடுக்காமல் அளவோடு மட்டுமே இயக்குனர் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது

பகத் பாசில் நடிப்பை நாம் இதுவரை தமிழில் ரசித்ததில்லை. முதல்முறையாக அவருடைய நடிப்பை ரசிக்கும் வாய்ப்பு தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. கார்ப்பரேட் உலகின் தந்திரங்களை கையாளும் ஒரு மார்க்கெட்டிங் அதிகாரியாக அறிமுகமாகும் அவருடைய கேரக்டர் இடைவேளைக்கு பின்னர் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு சவால் விடும் கேரக்டராக மாறிவிடுகிறது. அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் அவர் கொடுக்கும் பாடிலேங்குவேஜ் அவருடைய அனுபவத்தை பிரதிபலிக்கின்றது. 'தனி ஒருவன்' அரவிந்தசாமிக்கு இணையான ஒரு கேரக்டர் பகத்பாசில் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

பிரகாஷ்ராஜ், சதீஷ், சார்லி, மன்சூரலிகான், ரோஹினி, சினேகா, விஜய் வசந்த், ரோபோ சங்கர், ஆர்.ஜேபாலாஜி, தம்பி ராமையா, ஒய்ஜி மகேந்திரன் என ஒரு பெரிய நட்சத்திரக்கூட்டத்தையே படத்தில் பயன்படுத்தி அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுப்பது என்பது ஒரு இயக்குனருக்கு மிகப்பெரிய சவால். ஆனால் அதை கச்சிதமாக செய்துள்ள மோகன்ராஜாவுக்கு பாராட்டுக்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன் அம்மா ரோஹினி கேரக்டர் பேசும் ஒரே ஒரு வசனம் தான் படத்தின் திருப்புமுனை என்பதை நம்பவே முடியவில்லை

படம் முழுவதும் அழுத்தமான கதை இருப்பதால் இந்த படத்திற்கு பாடல்களே தேவையில்லை. இதனால்தான் கருத்தவனெல்லா கலீஜா' பாடலை முதலிலேயே பயன்படுத்திவிடுகின்றனர். சிவகார்த்திகேயன் - நயன்தாரா டூயட் பாடல் படத்திற்கு தேவையில்லை என்றாலும் படமாக்கப்பட்டவிதம் கண்ணுக்கு குளிர்ச்சி. அதே நேரத்தில் இசையமைப்பாளர் அனிருத், பின்னணி இசையில் தூள் கிளப்பிவிடுகிறார்.

ராம்ஜியின் கேமிரா, நாம் திரையரங்கில்தான் இருக்கின்றோமா? அல்லது குப்பத்தில் இருக்கின்றோமா? என்று நினைக்கும் வகையில் அபாரமாக வேலை செய்துள்ளது. எடிட்டர் ரூபன், விவேக் ஹர்ஷன் கச்சிதமான எடிட்டிங் படத்தின் வேகத்தை குறைக்காமல் இருக்க உதவுகிறது.

முதலாளி தரும் வேலைக்கு சம்பளம் வாங்கும் வேலைக்காரர்கள் முதலாளி செய்யும் தவறுகளுக்கு உடந்தையாகும் விசுவாசியாக மாற வேண்டிய அவசியமில்லை. முதலாளி விசுவாசத்திற்கு சம்பளம் கொடுக்கவில்லை, வேலைக்கு மட்டுமே சம்பளம் கொடுக்கின்றார் என்ற மிகப்பெரிய உண்மையை புரிய வைப்பதற்கான முதல் விதை தான் இந்த படம். இந்த ஒரே படம் ஒட்டுமொத்த வேலைக்காரர்களையும் சமூகத்தையும் மாற்றிவிடாதுதான். ஆனால் இந்த முயற்சி முதல் விதை. இந்த விதை நாளடைவில் விருட்சமானால் அந்த பெருமை இயக்குனர் மோகன்ராஜாவுக்கு நிச்சயம் உண்டு.

இந்த படத்தின் முதுகெலும்பே மோகன் ராஜாவின் வசனங்கள் தான். மெளலிவாக்கம் கட்டிடத்தை கட்டிய வேலைக்காரர்களுக்கு நிச்சயம் அந்த கட்டிடம் உறுதியானது இல்லை என்பது தெரிந்திருக்கும், நார்மல் பிரசவம் ஆக வேண்டிய ஒருவருக்கு சிசேரியன் செய்வது நிச்சயம் ஒரு நர்சுக்கு தெரிந்திருக்கும். இவர்களில் ஒருவராவது உண்மையை உலகிற்கு சொல்லியிருந்தால் பல இழப்புகளை தவிர்த்திருக்கலாம். ஒரு தரமற்ற பொருளை தயாரிப்பதில் முதலாளிக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கின்றதோ அதே அளவுக்கு அந்த தயாரிப்பை தயாரித்த வேலைக்காரர்களுக்கும் பங்கு உண்டு. தரமற்ற பொருளை தயாரிக்க மாட்டோம் என வேலைக்காரர்கள் முடிவு செய்தால் நாட்டில் மிகப்பெரிய புரட்சி உண்டாகும். தவறை யாரும் விரும்பி செய்வதில்லை, தவறு ஜெயித்து கொண்டே இருப்பதால் அதையே அனைவரும் பின்பற்றுகின்றனர். நல்லதும் ஜெயிக்கும் என்று மக்கள் உணர வேண்டும் என்பதே இயக்குனர் சொல்ல வரும் கருத்து

இந்த படத்தில் லாஜிக் மீறல் இல்லாமலில்லை. உதாரணமாக ஒரு பத்து நிமிட பேச்சால் ஒட்டுமொத்த ஊழியர்களும் முதலாளிக்கு எதிராக திரும்புவார்கள் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை. இருப்பினும் அப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைக்கக்கூடாது என்பது இல்லை

இந்த உலகத்திலேயே மிகப்பெரிய விஷயம் "செயல்" . அந்த செயலை தொடங்க முயற்சிக்கும் இந்த வேலைக்காரன், நிச்சயம் பாராட்டுதலுக்குரியவன் தான்

Rating : 3.3 / 5.0