சில காட்சிகள் நீக்கப்பட்டு இலவசமாக திரையிடப்படும் 'வேலைக்காரன்'
- IndiaGlitz, [Friday,January 26 2018]
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த 'வேலைக்காரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் கூறப்பட்டுள்ள உணவுப்பிரச்சனையின் ஆழத்தையும், முக்கியத்துவத்தையும் பள்ளி மாணவர்களுக்கு உணர வைக்கும் வகையில் இந்த படத்தை வரும் பிப்ரவரி 1 முதல் 15 வரை மாணவர்களுக்காக இலவசமாக திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
வணக்கம். வேலைக்காரன் திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த பெருவெற்றிக்கும், பேராதரவிற்கும் முதல் நன்றி. வெற்றியோடு மக்களுக்கான நல்ல கருத்தை முன்னெடுத்து சென்றதில் மிக மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு உறுதுணையாய் நின்று அடித்தளமிட்ட அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறையின் 24 அமைப்புகளை சேர்ந்த அனைத்து தொழிலாள நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளின் பாராட்டுக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு ,நடுநிலையான, நேர்மையான விமர்சனங்களை மனதார ஏற்கிறோம். இந்த நேரத்தில் முக்கிய அறிவிப்பாக வேலைக்காரன் படத்தில் எடுத்து கொள்ளப்பட்ட உணவுப்பிரச்சனையின் ஆழத்தையும், முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்தையும் வலியுறுத்தலையும் ஏற்று வேலைக்காரன் திரைப்படத்தை பள்ளி மாணவர்கள் பார்ப்பதற்கு ஏற்றவாறு சில காட்சிகளை நீக்கிவிட்டு, இலவசமாக திரையரங்குகளில் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 15 வரை திரையிட முடிவு செய்துள்ளோம். பள்ளி நிர்வாகத்தினர் எங்களை தொடர்பு கொண்டால் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் திரையரங்குகளில் படத்தை திரையிட விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உதவியோடு ஆவன செய்ய தயாராக உள்ளோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இலவச காட்சி குறித்த தகவல்களுக்கு 7010165044 மற்றும் 9600045747 ஆகிய எண்களை அல்லது velaikkaran.schools@24amstudios.com என்ற இமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது