காய்கறி, மளிகை வாங்கவும் கட்டுப்பாடு: தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Saturday,April 04 2020]
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது
இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் காய்கறிகள் மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2 30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. காய்கறி மற்றும் மளிகை கடைகளில் சமூக விலகலை சரியாக கடைபிடிக்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மீண்டும் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை முதல் காய்கறி மற்றும் மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். அந்த நேரத்தில் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.