'வேதாளம்' திரைவிமர்சனம். அஜித் ரசிகர்களுக்கான மாஸ் படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
'வீரம்' படத்தை ஹிட் கொடுத்த அஜீத்-சிவா கூட்டணி மீண்டும் இணைந்தபோதே 'வேதாளம்' படத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகமாகிவிட்டது. அதிலும் படத்தின் எந்த ஒரு காட்சிகளும், கதையும் ஏன் டிரைலர் கூட வெளியே வராததால், எதிர்ப்பார்ப்பின் அளவு உச்சமடைந்தது. இந்நிலையில் இன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியிருக்கும் 'வேதாளம்' ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ததா? என்பதை இப்போது பார்ப்போம்.
கொல்கத்தா ரயில் நிலையத்தில் தங்கை லட்சுமி மேனனுடன் அப்பாவி முகத்துடன் கள்ளங்கபடம் இல்லாத சிரிப்புடன் ரயிலில் இருந்து இறங்குகிறார் அஜீத். ரயிலில் இருந்து இறங்கியவுடன் மொட்டை ராஜேந்திரன் ரவுடிக்கூட்டத்தை தனது அன்பான சிரிப்பால் கவர்ந்து அவர்களையும் நல்லவர்களாக மாற்றுகிறார்.
தங்கையை கல்லூரியில் சேர்த்துவிட்டு, சூரியிடம் டாக்சி டிரைவராக வேலைக்கு சேர்ந்து நிம்மதியான வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கிறார் அஜீத். இந்நிலையில் கொல்கத்தா நகரில் இருக்கும் அனைத்து டாக்சி டிரைவர்களையும் ஒரு மீட்டிங்கிற்காகஅந்த ஊர் காவல்துறை அதிகாரி அழைத்து, நகரில் இருக்கும் சில சட்டவிரோத கும்பல்களின் புகைப்படங்களை கொடுத்து, இதில் யாரையாவது பார்த்தால் தகவல் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறார்.
100% நல்லவராக இருக்கும் அஜீத், தற்செயலாக அந்த புகைபடத்தில் இருந்த ஒருவனை பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கின்றார். இதனால் அந்த இடத்திற்கு ரெய்டு வரும் காவல்துறையினர் ஏராளமான ஆயுதங்களையும் போதைப்பொருட்களையும் கைப்பற்றுகின்றனர். போலீஸுக்கு இன்பார்மராக இருந்தவனை கண்டுபிடிக்க அழிக்க நினைக்கும் சட்டவிரோத கூட்டம் அஜீத்தை கண்டுபிடித்து வில்லன் முன் அழைத்து வருகிறது. அப்போதுதான் அவர்களுக்கு தெரிகிறது அஜீத்தை அவர்கள் அழைத்துவரவில்லை, அஜீத் தான் அவர்களை அழைத்து வந்தார் என்பது.
அப்பாவி பெண்களை கடத்தி விற்கும் கும்பலின் தலைவனாக இருக்கும் ராகுல்தேவ் மற்றும் கபீர்சிங்கின் தம்பியையும், அவருடைய ஆட்களையும் கொன்று துவம்சம் செய்கிறார் அஜீத், அதன்பின்னர் அஜீத் உண்மையில் யார் என்பதும் எதற்காக கொல்கத்தா வந்தார் என்பதும், லட்சுமி மேனன் உண்மையில் யார் என்பதும், அஜீத்-லட்சுமிமேனனுக்கும் ராகுல்தேவ்-கபீர்சிங் சகோதரர்களுக்கும் இடையே என்ன பிரச்சனை என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது. அந்த நிமிடத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை என்ன நடக்கின்றது என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் இயக்குனர் சிவா கொடுத்திருக்கும் மீதிக்கதைதான் 'வேதாளம்'.
இது ஒரு முழுக்க முழுக்க பக்கா அஜீத் படம் என்றே சொல்லலாம். அப்பாவியான முகத்துடன் ஆரம்பத்தில் அறிமுகமாவது, அதன் பின்னர் திடீரென ஆக்சன் ஹீரோவாக மாறுவது, தங்கையின் முன்னர் அமைதியான அண்ணனாகவும், வில்லன்கள் முன் ஆக்ரோஷமான கொலைகாரனாக மாறுவது என மாறி மாறி உண்மையில் நடிப்பில் தெறித்திருக்கின்றார். ஆரம்பத்தில் சூரி மற்றும் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து செய்யும் காமெடி சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், பின்னர் ஆக்ஷனுக்கு மாறியபின்னர் அஜீத்தின் ஃபெர்மான்ஸ் உண்மையிலேயே ரசிக்கத்தக்க அளவில் உள்ளது. மேலும் பிளாஷ்பேக்கில் வரும் 'வேதாளம்' கேரக்டரிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அஜீத் தனது ரசிகர்களுக்கு ஒரு பக்கா எண்டர்டெயின்மெண்ட்டை கொடுத்துள்ளார் என்பது மட்டும் உறுதி
ஒரு பெரிய ஸ்டாரின் படம் என்றால் அதற்கு ஒரு ஹீரோயின் வேண்டும். அந்த ஒரு டைட்டிலுக்காக பயன்படுத்தப்பட்டவர் ஸ்ருதிஹாசன். அஜீத் வில்லனை கொலை செய்யும்போது பார்த்துவிட்டு நீ ஒரு கொலைகாரனா? என்று ஷாக் ஆவதும், அதன்பின்னர் அவருடைய பிளாஷ்பேக்கை கேட்டு அஜீத் மீது இரக்கப்படுவதும் மட்டுமே ஸ்ருதியின் வேலை. இவருடைய காட்சிகளை மொத்தமாக கட் செய்துவிட்டு படத்தை பார்த்தால் படத்தின் மெயின் கதைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
அஜீத்தை அடுத்து ஆடியன்ஸை கவர்ந்தவர் லட்சுமிமேனன் தான். அண்ணனிடம் பாசத்தை பொழிவது, அஸ்வின் தன்னை திருமணம் செய்ய விரும்புகிறார் என்றதும் உன் விருப்பம் எதுவோ, அதுவே என் விருப்பம் என அஜீத்திடம் கூறுவது, அஜீத் ஒரு அப்பாவி என்றும், எந்தவித வம்புக்கும் போகாதவர் என்று கடைசி வரை நம்பிக்கொண்டிருப்பதும் என அழகாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
முக்கிய வில்லனாக வரும் ராகுல்தேவ், அவரின் தம்பியாக வரும் கபீர்சிங் ஆகியோர்களின் வில்லத்தனமான நடிப்பு ஓகே. ஆனால் இவர்களுடைய கேரக்டர்களில் எந்தவித புதுமையும் இல்லை. கிளைமாக்ஸில் எல்லா தமிழ்ப்பட வில்லன்களும் செய்யும் தவறைத்தான் ராகுலும் செய்கிறார்.
பார்வயற்றவராக வரும் தம்பி ராமையா தன்னுடைய வழக்கமான நடிப்பில் இருந்து மாறுபடுகிறார். சூரி, கோவை சரளா இருவரும் மருமகன், மாமியாராக நடித்துள்ளனர். முதலில் டாக்சி நிறுவனத்தின் ஓனராக பந்தாவாக அறிமுகமாகும் சூரி, அதன்பின்னர் மாமியாரிடம் அடிவாங்கும் சோதாவாக நடித்துள்ளார். ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இவர் செய்த காமெடி எடுபடவில்லை என்பது ஒரு வருத்தம்தான்.
அஸ்வின், வித்யூலேகா ராமன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, பாலாசரவணன், ஆதித்யா டிவி புகழ் பாப்பா, ஆகியோர்களுக்கு கொடுக்கப்பட்ட சின்ன சின்ன கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர்.
இயக்குனர் சிவா பல படங்களில் பார்த்த பழிவாங்கும் கதையைத்தான் இதிலும் எடுத்துள்ளார். ஆனால் திரைக்கதையில் வித்தியாசம் காட்டியதால் ஒரு பக்கா எண்டர்டெயின்மெண்ட் படமாக மாறியுள்ளது. முழுக்க முழுக்க அஜீத்தை மட்டுமே நம்பி எடுத்துள்ளார் என்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது. இருப்பினும் முதல் அரைமணி நேர காட்சிகள் கொஞ்சம் போரடிக்கின்றது. அஜீத்தை ஆக்ரோஷமாக காட்டியபின்னர் படம் வேகம் பெறுகிறது. அந்த வேகத்தை கடைசி வரைக்கும் குறையாமல் எடுத்து சென்ற சிவாவுக்கு பாராட்டுக்கள். கிளைமாக்ஸில் தங்கை லட்சுமிமேனனை காப்பாற்ற அஜீத் போராடும் காட்சிகள் செம விறுவிறுப்பு. கடைசியாக லட்சுமி மேனன் துப்பாக்கியை எடுத்து அஜீத்திடம் கொடுத்து ராகுல்தேவை சுட்டு கொல்லும்படி கூறும்போது அதற்கு அஜீத் சொல்லும் பதிலுக்கு தியேட்டர் அமைதியாக பல நிமிடங்கள் ஆகிறது.
ரசிகர்களை தெறிக்கவிடும் வசனங்களை சரியான இடங்களில் வைத்துள்ளார் இயக்குனர் சிவா. குறிப்பாக அஜீத்தை பார்த்து சூரி, 'உனக்கு கார் ஓட்ட தெரியுமா? என்று கேட்கும் காட்சியில் தியேட்டரில் விசில்சத்தம் காதை பிளக்கின்றது. மேலும் 'ஒரு ஆம்பளையைக் காப்பாத்துனா ஒருத்தனைக் காப்பாத்துன மாதிரி. ஆனால் ஒரு பொண்ணைக் காப்பாத்துனா ஒரு பரம்பரையையே காப்பாத்துன மாதிரி' என்ற வசனமும், 'பொண்ணை கட்டிக் கொடுக்கறது ஆணை நம்பி மட்டும் இல்லை. வீட்ல இருக்கும் பொண்ணுங்களை நம்பியும்தான்' போன்ற செண்டிமெண்ட் வசனங்களும், "நான் காசுக்காக எது வேணா.செய்வேன்.ஆனா தன்மானத்துக்கு ஆபத்துன்னா.... என்ற அதிரடி வசனமும், 'நம்ம நாட்ல பொண்ணுங்க ஏன் முன்னால வர்றதில்லைன்னா பின்னால எவனாவது வர்றான்னுதான் பார்த்துகிட்டு பயத்தோட இருக்கறதனாலதான், பொண்ணுங்களை பாலோ பண்ணாதீங்க அவங்களை படிக்க விடுங்க' என்ற தத்துவ வசனமும் அனைவரும் கவர்ந்த வசனங்கள். மேலும் சூரி அஜீத்திடம் நீ ட்விட்டர்ல இருக்கியான்னு கேட்க, அதற்கு அஜித் நோ என்று சொன்னபின்னர், 'அப்போ கருத்து சொல்றேன்னு யார் மனசையும் காயப்படுத்த மாட்டே' என இன்றைய டுவிட்டர் பயனாளிகளின் நிலையை நகைச்சுவையாகவும் எடுத்துரைக்கின்றார்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் ஓகே என்றாலும், பின்னணி இசைக்காக கடினமாக உழைத்திருக்கின்றார் என்பது தெரிகிறது. அஜீத்தின் ஒவ்வொரு ஆக்சன் காட்சியிலும் தெறி இசையால் தெறிக்க விடுகிறார். ஒருசில இடங்களில் மட்டும் காது வலிக்கின்றது.
இந்த படத்தில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் அமைந்தது சண்டைக்காட்சிகள்தான். ஸ்டண்ட் சில்வாவின் ஆக்சன் காட்சியமைப்புகள் அபாரம். குறிப்பாக இடைவேளைக்கு முன்னர் அமைந்துள்ள சண்டைக்காட்சிகள், 'வேதாளம்' கேரக்டரின் சண்டைக்காட்சிகள் ஆகியவைகளை சொல்லலாம். அஜீத், ஸ்டண்ட் சில்வா, அனிருத் மற்றும் இயக்குனர் சிவா ஆகியோர்களின் ஒட்டுமொத்த உழைப்பு அனனத்து சண்டைகாட்சிகளிலும் பிரமிப்பை வரவழைத்துள்ளது.
வெற்றியின் கேமராவில் நல்ல தரம் தெரிகிறது. குறிப்பாக ஆக்சன் காட்சிகளிலும், இத்தாலி பாடல் காட்சிகளிலும் அருமை. எடிட்டர் ரூபன் பல இடங்களில் இன்னும் கத்தரி வைத்திருக்க வேண்டும். குறிப்பாக முதல் அரைமணி நேரக்காட்சிகளிலும் 'வேதாளம்' கேரக்டரின் பிளாஷ்பேக்கிலும் இன்னும் கொஞ்சம் கட் செய்திருந்தால் படம் நல்ல விறுவிறுப்பை பெற்றிருக்கும்.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்களுக்கு இந்த படம் வணிகரீதியில் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அஜீத் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமாவை ரசிக்கும் அனைவருக்கும் தீபாவளி தினத்தில் ஒரு பக்கா மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படத்தை பார்த்த திருப்தி இந்த படத்தை பார்த்த அனைவருக்கும் ஏற்படும்.
மொத்தத்தில் 'வேதாளம்'. வேற லெவல் மாஸ் படம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout