திமுக கூட்டணிக்குள் வெடித்த புதிய சர்ச்சை… ஓரு அணியில் இருந்து சிதைகிறதா கூட்டணி?
- IndiaGlitz, [Wednesday,October 14 2020]
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் தனித்து போட்டியிடுகிறது. இந்தக் கருத்தை திமுக கூட்டணிக்கு ஆலோசனை வழங்கும் ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிராஷ்ந்த் கிஷோர் வலியுறுத்தியதாகவும் செய்திகள் கசிந்தது. இதற்கு மாறாக காங்கிரஸ் வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனவும் அதோடு துணை முதலமைச்சர் பதவியும் காங்கிரஸ்க்கே ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தது. இந்தச் சிக்கலுக்கே தீர்வுக் காணப்படாமல் இருக்கும்போது திமுக கூட்டணிக்குள் சின்னத்தின் வடிவத்தில் புதிய சர்ச்சை கிளம்பி இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன.
திமுக 200 தொகுதிகளுக்கு மேல் தமிழகத்தில் தனித்து போட்டியிட இருப்பதால் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் திமுக சின்னத்திலேயே (உதயச்சூரியன்) போட்டியிடுமாறு திமுக கட்சித் தலைமை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும் மேலும் திமுகவின் தலைமை மீது அதீதக் கோபத்தில் இருப்பதாகவும் முக்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
இந்த விவகாரம் குறித்து “நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்து இருக்கிறார் வைகோ. அதேபோல வரும் சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என தொல்.திருமாவளவன் அவர்களும் திட்டவட்டமாக கருத்து தெரிவித்து இருக்கிறார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலை சிறுத்தைகளும் விலகி நிற்குமா என்பது போன்ற விவாதத்தை சிலர் கையில் எடுத்து இருக்கின்றனர்.
ஆனால் கட்சி தலைமை அப்படி ஒரு நிலைமைக்கு விட்டுவிடாது எனவும் மூத்தத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் “எந்த கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பதை தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுப்போம்” எனக் கூறி இருக்கிறார். ஆனால் இந்த விவகாரம் ஏற்கனவே கூட்டணிக்கு கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டது எனவும் சிலர் கருத்துச் சொல்கின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் “கூட்டணியின் பாதையும் பயணமும் தெளிவு வாய்ந்தவை” எனத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஆனால் திமுகவின் இந்த யுக்தி வெல்லுமா எனவும் அரசியல் வட்டாரத்தில் தற்போது கேள்விகளாக எழுப்பி வருகின்றன.