பாகுபலி 2-சத்யராஜ் பிரச்சனை: வாட்டாள் நாகராஜ் முக்கிய முடிவு
- IndiaGlitz, [Saturday,April 22 2017]
கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் கூறிய கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக நேற்று சத்யராஜ் அறிவித்ததை அடுத்து பாகுபலி-2 படத்திற்கு எதிரான கன்னட அமைப்பினர் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். இதனால் 'பாகுபலி 2' படத்திற்கு ஏற்பட்டிருந்த பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.
நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே 'பாகுபலி 2' படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிப்போம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னட அமைப்புகள் கெடு விதித்து இருந்த நிலையில் பாகுபலி-2 படக்குழுவினர் தவிப்பில் இருந்தனர். அதுமட்டுமின்றி பாகுபலி 2 ரிலீஸ் தினமான 28 ஆம் தேதி பெங்களூருவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் நேற்று சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததையடுத்து பாகுபலி -2 படத்திற்கு எதிரான கன்னட அமைப்பினர் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் சற்று முன்னர் கூறியுள்ளார். மேலும் சத்யராஜ் எதிர்காலத்தில் கவனமாக பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதை அடுத்து பாகுபலி 2 படத்தின் உரிமை பெற்ற கர்நாடக விநியோகிஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.