Varisu Review
தளபதி விஜய்யின் 'வாரிசு' திரைவிமர்சனம்: விஜய் ரசிகர்களுக்கான விருந்து
தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம்.
இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவரான சரத்குமாருக்கு மூன்று வாரிசுகள். ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் விஜய். ஆனால் அவர் தனது உறவினர்கள், நண்பர்கள், தொழில் பார்ட்னர்களிடம் தனக்கு இரண்டு மகன்கள் மட்டுமே உண்டு என்று கூறுகிறார். மூன்றாவது மகன் விஜய்யை அவர் ஏன் வெறுக்கின்றார் என்பதற்கு ஒரு சிறிய பிளாஷ்பேக் காட்டப்படுகிறது.
இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ஜெயசுதா தம்பதிகளின் 60வது திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில் அம்மா ஜெயசுதாவின் வேண்டுகோளுக்கு இணங்கி 7 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய விஜய் மீண்டும் வருகிறார். அப்போது சரத்குமார் உள்பட தனது குடும்பத்தினர் யாரும் மாறவே இல்லை என்பதை கண்டறிகிறார்
60-வது திருமணத்தின்போது தான் மலைபோல் நம்பிய இரண்டு மகன்களின் சுயரூபத்தை அறிந்து உடைந்து போகிறார் சரத்குமார். இதற்கெல்லாம் காரணம் தனது தொழில் எதிரியான பிரகாஷ்ராஜ் என்பதும் சரத்குமாருக்கு புரிகிறது.
இந்த நிலையில் எவ்வளவு பெரிய தொழில் எதிரிகளையும் அசால்ட்டாக சமாளிக்கும் சரத்குமாருக்கு எதிர்பாராத ஒரு தீர்க்கவே முடியாத பிரச்சனை எழுகிறது. இந்த நிலையில் அம்மாவிடம் விடை பெற்றுக்கொண்டு விஜய் மீண்டும் வீட்டை விட்டு செல்லும் விஜய், அப்பாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையை அறிந்ததும், விமான நிலையம் வரை சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்புகிறார். அவர் வந்தவுடன் குடும்பத்தில் மற்றும் தொழிலில் அவர் செய்யும் அதிரடி நடவடிக்கைகள், திருப்பு முனைகள் ஆகியவைகல் தான் இந்த படத்தின் இரண்டாம் பாதி.
அட்டகாசமான பாடலுடன் அறிமுகமாகும் தளபதி விஜய்யின் நடிப்பு பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அப்பாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் வீட்டை விட்டு வெளியேறுவது, அம்மாவிடம் மட்டும் அவ்வப்போது தொடர்பில் இருப்பது, சொந்தமாக தொழில் தொடங்கும் ஐடியா, ராஷ்மிகாவுடன் காதல், யோகிபாபுவுடன் காமெடி என முதல் பாதி ஜாலியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென சரத்குமாரின் பிரச்சனையை கையில் எடுத்தவுடன் படம் விறுவிறுப்பாகிறது. விஜய்யின் முழு திறமைக்கேற்ற தீனியை இயக்குனர் வம்சி ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கியிருக்கின்றார்.
ஒரு மாஸ் ஹீரோ படத்தில் நாயகிக்கு என்ன வேலை இருக்குமோ, அந்த வேலையைத்தான் ராஷ்மிகா மந்தனா செய்துள்ளார். விஜய்யுடன் மூன்று பாடல் மற்றும் நான்கு காட்சிகளில் தலைகாட்டுகிறார்.
சரத்குமாருக்கு அழுத்தமான கேரக்டர். எந்த பிரச்சனையையும் ஊதித்தள்ளும் அவர், ஒரு பிரச்சனை காரணமாக உடைந்து போகிறார். தன் கண்முன்னே தனது குடும்பம் சிதைந்து போவதை கண்டு மனம் வெதும்பும் காட்சிகளில் அற்புதமாக நடித்துள்ளார். குறிப்பாக விஜய்யிடம் தனது தவறை உணர்ந்து அவர் பேசும் வசனங்கள் சூப்பர்.
பிரகாஷ்ராஜ் வழக்கம்போல் உதார் விடும் வில்லனாகவும், அவ்வப்போது விஜய்யிடம் மூக்கு உடைக்கப்படும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். பல படங்களில் இதேபோன்ற நடிப்பை பார்த்துவிட்டதால் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. இரண்டே காட்சிகளில் வந்தாலும் எஸ்.ஜே.சூர்யா சூப்பர். குறிப்பாக விஜய்யிடம் அவர் பேசும் டயலாக் விஜய் ரசிகர்களுக்கு சரியான விருந்து.
ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோர் விஜய்யின் அண்ணனாகவும், அவ்வப்போது வில்லனாகவும், பின்னர் மனம் திருந்தும் கேரக்டர்களில் நடித்துள்ளனர். பிரபு ஒருசில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார். சங்கீதா, சம்யுக்தா ஆகியோர்களும் இந்த படத்தில் உண்டு.
கதை சீரியஸாக செல்லும்போதெல்லாம் யோகிபாபு அவ்வப்போது சிரிப்பூட்டுகிறார். விஜய்யுடன் அவர் செய்யும் காமெடி வொர்க்-அவுட் ஆகியுள்ளது. விடிவி கணேஷ், ஸ்ரீமான் காமெடியும் ஓகே.
ஜெயசுதாவுக்கு மிக அழுத்தமான கேரக்டர். 'நீங்க இந்த வீட்டில சந்தோஷமா இருக்கிங்கிளா' என விஜய் கேட்கும்போது 'நான் சொல்ற பதில் உனக்கு புரியாது' என்று சொல்லும் ஜெயசுதாவின் வசனத்தில் ஆயிரம் அர்த்தம் உள்ளது. 'இதுவரை அம்மா உன்னிடம் எதுவுமே கேட்டதில்லை, இந்த ஒன்றை மட்டும் செய்' என்று விஜய்யிடம் ஜெயசுதா கேட்க அதை விஜய் நிறைவேற்றும் விதமும் சூப்பர்.
இசையமைப்பாளர் தமன் ஐந்து பாடல்களிலும் தூள் கிளப்பியுள்ளார். குறிப்பாக ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு எழுந்து ஆடாத நபர்கள் இருக்க வாய்ப்பில்லை. விஜய்யின் ஒவ்வொரு மாஸ் காட்சியிலும் பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது.
ஒரு விஜய் படத்திற்கு என்னென்ன வேண்டும் என்பதை சரியாக கணித்து ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் வம்சி செதுக்கியுள்ளார் தான் கூற வேண்டும். ஆனால் விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்தி செய்த இயக்குனர் வம்சி, பொதுவான ஆடியன்ஸ்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் கோட்டை விட்டுள்ளார். எளிதில் அடுத்த காட்சியை யூகிக்கும் வகையிலான திரைக்கதை ஒரு பெரிய மைனஸ். குறிப்பாக போர்டு ஆப் டைரக்டர்களை விஜய் தன் பக்கம் இழுக்கும் காட்சியை அழுத்தமாக வைத்திருக்கலாம், அந்த காட்சியை காமெடியாக்கி இயக்குனர் சொதப்பியுள்ளார். அதேபோல் அண்ணன்களை விஜய் திருத்தும் காட்சிகளும் அழுத்தமாக இல்லை. 'வாழ்க்கை வெற்றி பெறுவதற்காக இல்லை, வாழ்வதற்காக' என பிரகாஷ்ராஜ்க்கு விஜய் கூறும் அறிவுரை நமக்கும் தான்.
ஒரு அப்பாவிடம் ஒரு மகனுக்கு எவ்வளவு கருத்து வேறுபாடு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு மகனுக்கும் அப்பா தான் ஹீரோ’ என்ற அழுத்தமான மெசேஜை சொல்லும் இயக்குனருக்கு ஒரு சபாஷ்.
மொத்தத்தில் விஜய்யின் வாரிசு, ரசிகர்களுக்கான அற்புதமான பொங்கல் விருந்து.
- Read in English