தந்தை நடிகரின் படத்தில் பிரபல மகள் நடிகை

  • IndiaGlitz, [Sunday,February 18 2018]

கோலிவுட் திரையுலகில் தந்தை - மகள் ஒரே படத்தில் பணிபுரிவது புதியது அல்ல. கே.பாக்யராஜ் - சரண்யா, கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன், அர்ஜூன் - ஐஸ்வர்யா உள்பட பலர் ஒரே படத்தில் பணிபுரிந்துள்ளனர். அந்த வகையில் நடிகர் சரத்குமாரும் அவருடைய மகள் வரலட்சுமியும் தற்போது ஒரே படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சரத்குமார் நடித்து வரும் புதிய ஆக்சன் திரைப்படம் 'பாம்பன்'. ஏ.வெங்கடேஷ் மீண்டும் சரத்குமாருடன் இணையும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 23ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் தற்போது முக்கிய வேடம் ஒன்றில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் நாயகி கேரக்டர் வரலட்சுமிக்கு இல்லை என்றாலும் அதிரடி ஆக்சன் காட்சிகள் அடங்கிய ஒரு அதிரடி கேரக்டரில் நடிக்கின்றார். பண்டைய புராணங்களின் கதையம்சம் கொண்ட இந்த படம் இந்த தலைமுறையினர் ரசிக்கும் வகையில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், கஞ்சா கருப்பு, கோட்ட ஸ்ரீனிவாசராவ், இமான் அண்ணாச்சி, வின்செண்ட் அசோகன், இளவரசு மற்றும் சிறப்பு தோற்றத்தில் ரித்திகா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.