முட்டாள்கள்: நயன்தாராவின் வாடகைத்தாய் சர்ச்சை குறித்து வனிதா விஜயகுமார்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியிருக்கும் நிலையில் இது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் வனிதா விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் முட்டாள்கள் சொல்வதைப் பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம் என்றும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த நான்கே மாதத்தில் அவர்கள் இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் விதிகள் கடைபிடிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்களும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகியுள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ’ஒரு தம்பதி பெற்றோர் ஆவதைவிட சந்தோஷமான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. இரண்டு அழகான குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும் வாடகைத்தாய் குறித்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் கூறியபோது, ’லீகல் தெரியும், மெடிக்கல் தெரியும் என்று சில முட்டாள்கள் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குவார்கள். ஆனால் நீங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

வாடகைத்தாய் குறித்த விதிகளை முழுமையாக அறிந்து கொள்ளாமலா நயன்தாரா- விக்னேஷ் தம்பதிகள் இரட்டை குழந்தைகள் பெற்றிருப்பார்கள் என வனிதா விஜயகுமாரின் பதிவுக்கு நெட்டிசன்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.