போலீசார் முன் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை: வனிதா-சூர்யாதேவி சமாதானமா?

வனிதாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த சூரியா தேவி மீது வனிதாவும், வனிதா தன்னை கஞ்சா வியாபாரி என்றும் தனக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக அவதூறாக கூறியதாக வனிதா விஜயகுமார் மீது சூரியா தேவியும் மாறி மாறி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து வனிதா மற்றும் சூரியா தேவி ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் மாலை காவல் நிலையத்துக்கு வரவழைத்த சென்னை வடபழனி காவல் நிலைய அதிகாரிகள், இருவருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்த இந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வனிதா, தான் இந்த விஷயத்தை சமரசமாக முடித்து கொள்ளலாம் என்று முடிவு செய்ததாகவும், ஆனால் போலீசார் எவ்வளவோ அறிவுறுத்தியும் மன்னிப்பு கேட்க சூரியா தேவி தயாராக இல்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே சமாதானம் ஆகாததால் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் மோதல்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.