சாதி பெயரால் அவதூறு செய்தவர்களுக்கு ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா பதிலடி!
- IndiaGlitz, [Friday,August 06 2021] Sports News
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் அர்ஜென்டினாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தனர். இந்தத் தோல்வியை அடுத்து இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்ற உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை வந்தனா கட்டாரியா வீட்டிற்குமுன்பு சிலர், அவரது சாதிப்பெயரைக் கூறி அவமரியாதை செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
மேலும் இந்திய அணியில் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் இடம்பெற்றதாலேயே ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததாகவும் வந்தனா கட்டாரியா குடும்பத்தினரை அவமரியாதை செய்தததாகக் கூறப்படுகிறது. அதோடு வந்தனாவின் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்து கேலியும் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு பிரபலங்கள், விளையாட்ட வீரர்கள் பலரும் கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வந்தனா தனது டிவிட்டர் பக்கத்தில், “புத்தரின் ஞானமும் அம்பேத்கரின் நிலைத்தன்மையும், கான்ஷிராமின் உறுதியும் என்னுள் இருக்கிறது. நான் தலித் ஆக இருப்பதில் பெருமை அடைகிறேன்’‘ எனப் பதிவிட்டு உள்ளார். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாகவும் தைரியமாகவும் நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை வார்த்தைகளையும் அவர் உதிர்த்துள்ளார்.
இந்தப் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்ற வந்தனா கட்டாரியா டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர ஒலிம்பிக் போட்டியில் பெண் வீராங்கனை ஒருவர் ஹாட்ரிக் கோல் அடித்ததும் இதுவே முதல்முறை. இதனால் இந்திய ரசிர்கள் பலரும் வந்தனாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.