நான் துக்கட்டா அரசியல்வாதியா? பெண்களுக்கு மரியாதை இதுதானா: கமல் மீது பொங்கிய வானதி
- IndiaGlitz, [Monday,March 29 2021]
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் போட்டியிட்டு வரும் நிலையில் வானதி சீனிவாசனுக்காக சமீபத்தில் பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் கமல்ஹாசன் மற்றும் வானதி ஸ்ரீநிவாசன் ஆகிய இருவரும் நேருக்கு நேர் விவாதம் செய்ய வேண்டும் என்றும் அப்பொழுதுதான் திறமையானவர்கள் யார் என்பது தெரியவரும் என்றும் கூறினார்.
இதற்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த துக்கடா அரசியல்வாதியுடன் கமல்ஹாசன் அவர்கள் விவாதம் செய்ய மாட்டார் என்றும் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உடன் விவாதம் செய்ய அவர் தயார் என்றும் ஸ்மிருதி இராணி இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தன்னை துக்கடா அரசியல்வாதி என விமர்சனம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வானதி சீனிவாசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: மத்தியில் அரசாங்கத்தை அமைத்து இருக்கும் ஒரு கட்சி, பல்வேறு மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி, பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கட்சி பாஜக. ஒரு பெண்ணாக நானும் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறேன்.
ஆனால் கமல் அவர்கள் வானதியுடன் விவாதம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி கூறியதற்கு என்னை துக்கடா அரசியல்வாதி என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறி உள்ளனர். நான் இங்கே ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து அரசு பள்ளியில் படித்து, வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், குடும்பம் இருக்கிறது. இதையும் மீறி நான் மக்களுக்காக சேவை செய்து வருகிறேன்.
கடந்த 5 ஆண்டுகளாக நான் இந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன செய்துள்ளேன் என்பதை என்னுடைய சமூக ஊடகத்தில் எடுத்து பாருங்கள், தெரியும். ஆனால் என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறார்கள் என்றால் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து அரசியலில் உயர்ந்த ஒருவரை பார்த்து இப்படித்தான் கேவலப்படுத்துவதா? என சிந்தித்து பாருங்கள். உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் இதே போன்று கஷ்டம் இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் கஷ்டப்பட்டு தான் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார். இப்படி முன்னேறிவரும் பெண்களுக்கு, பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்கள் மீது இவர்கள் வைக்கும் விமர்சனம் இதுதானா? இப்படிப்பட்டவர்கள் பெண்களை எப்படி காப்பாற்றுவார்கள்? பெண்கள் நலனில் எப்படி அக்கறை செலுத்துவார்கள்? மக்கள் நீதி மய்யம் கமல் அவர்கள் இதற்கு பதில் சொல்லவேண்டும். அவர் முன் இந்த கேள்வியை வைக்கிறேன்’ என்று வானதி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
"துக்கடா வானதி"???
— Vanathi Srinivasan (@VanathiBJP) March 29, 2021
மக்கள் நீதி மையத்தின் அனாகரிகமான விமர்சனம்!@ikamalhaasan @drmahendran_r#Vanathi4KovaiSouth #KovaiSouth #CoimbatoreSouth pic.twitter.com/VDEP1rQT5A