Valimai Review
'வலிமை': அஜித் ரசிகர்களுக்கான ஆக்சன் விருந்து!
அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பதும் இந்தப் படத்தின் டீசர், டிரைலர், புரமோ வீடியோக்கள் படத்தின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றது என்பது தெரிந்ததே. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா படம்? என்பதை பார்ப்போம்
சென்னையில் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த அர்ஜுன் (அஜித்) என்ற காவல்துறை அதிகாரி வரவழைக்கப்படுகிறார். அவர் இந்த மூன்றையும் செய்வது ஒரு குரூப் தான் என்பதை கண்டு பிடிக்கிறார். அதன் பிறகு அஜித்தின் சாகசங்கள், புத்திசாலித்தனமான டிஜிட்டல் தேடல்கள், சேசிங் காட்சிகள் என படம் விறுவிறுப்பாக செல்கிறது. ஒரு கட்டத்தில் வில்லன் யார் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு விசாரிக்க்கும்போது திடீர் திருப்பத்துடன் இடைவேளை வருகிறது. இடைவெளிக்கு பிறகு அந்தத் திருப்பம் என்ன ஆனது? அஜித்தின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு என்ன? அந்த இழப்பை சரிக்கட்ட அஜித் எடுத்த முயற்சி என்ன? என்பதுதான் இந்த படத்தின் இரண்டாம் பாதி.
முதல் பாதியில் சேசிங் காட்சிகள், வில்லனின் அட்டகாசமான கிரைம் காட்சிகள், வில்லனின் ஐடியாவை முதலிலேயே கண்டுபிடித்து அதற்கேற்றவாறு காய்களை நகர்த்தும் அஜித்தின் புத்திசாலித்தனமான காட்சிகள் ஆகிய பிளஸ்களாக இருந்தாலும், இரண்டாம் பாதியின் சறுக்கல்களால் காணாமல் போகிறது. இரண்டாம் பாதியில் ஒருசில சேஸிங் காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் ஒரு சராசரி இயக்குநர் இயக்கும் படம் போல் மாறிவிட்டது துரதிஷ்டமே.
அஜித் தனக்கு கொடுத்த கேரக்டரை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். ரிஸ்க் எடுத்த ஆக்சன் காட்சிகள் மற்றும் சேஸிங் காட்சிகளில் உயரை கொடுத்து நடித்திருக்கிறார். ஒரு சில சென்டிமெண்ட் காட்சிகள் தவிர அவர் வரும் அனைத்து காட்சிகளும் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது
ஹூமா குரேஷி வரும் காட்சிகள் குறைவு என்றாலும் அவரது நடிப்பு நிறைவு. இந்த படத்தில் அஜித் ஒரு ஹீரோ என்றால் இன்னொரு ஹீரோ நீரவ் ஷா என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவரும் அவருடைய குழுவினர்களும் கடுமையாக உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் தனது அதிகபட்ச உழைப்பை கொட்டியிருக்கிறார் என்று தான் வேண்டும். தமிழ் சினிமாவிற்கு இதுவரை காணாத வகையில் ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாகவும், பைக் சேஸிங் காட்சிகள் த்ரிலிங்காகவும் உள்ளது.
இயக்குனர் எச்.வினோத் 'சதுரங்க வேட்டை' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய இரண்டு படங்களிலும் மிகவும் சிறப்பாக அமைத்த திரைக்கதையை இந்த படத்தில் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டிருக்கிறார். சாத்தான்கள் அடிமைகள் உள்பட ஒருசில ஆய்வுகளை செய்து படத்தில் சரியான இடத்தில் புகுத்திய வினோத்தின் புத்திசாலித்தனத்தை பாராட்டலாம். ஆனால் இரண்டாம் பாதியின் திரைக்கதையில் தேவையில்லாத சென்டிமெண்ட் மற்றும் மிகவும் அரதப்பழசான கிளைமாக்சை வைத்தது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் ஆக்சன் ரசிகர்களையும் அஜித் ரசிகர்களையும் திருப்தி செய்யும் வகையில் 'வலிமை' அமைந்துள்ளது.
- Read in English