ரிலீசுக்கு முன்னரே ரூ.300 கோடி பிசினஸ் செய்ததா வலிமை?

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ரிலீஸுக்கு முன்னரே 300 கோடி ரூபாய் பிசினஸ் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் மதுரையில் 100 சதவீத திரையரங்குகளிலும் மற்ற அனைத்து நகரங்களிலும் 90 சதவீத திரையரங்குகளிலும் ’வலிமை’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஹிந்தியில் மட்டும் இந்த படம் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் அது மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் பான் - இந்தியா திரைப்படமாக ’வலிமை’ உள்ளது.

இந்த நிலையில் திரையுலக வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவலின்படி ’வலிமை’ படம் இதுவரை 300 கோடி அளவிற்கு வியாபாரம் செய்துள்ளதாகவும் இந்த படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு காரணமாகவே இத்தனை கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

’வலிமை’ படத்தின் பட்ஜெட் சுமார் 150 கோடி என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது ரிலீஸுக்கு முன்னரே இருமடங்கு வியாபாரம் செய்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தமிழக திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் முதல் நாள் வசூல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது.