ஓ.என்.வி. விருதை மதிப்புடன் திருப்பி அளித்த வைரமுத்து...!
Send us your feedback to audioarticles@vaarta.com
இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஓ.என்.வி. விருதை திருப்பி அளிக்கிறேன், அதற்கான பரிசுத்தொகையை கேரள கொரோனா நிவாரண நிதிக்காக வழங்குகிறேன் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கூறியுள்ளார்.
கேரளாவில் மிக மரியாதைக்குரிய விருதாக கருதப்படும் ஓஎன்வி குறுப் இலக்கிய விருது, தமிழ்க் கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விருது வழங்குவது குறித்து ஏராளமான கண்டனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து பரிசீலனை செய்யவேண்டும் என, ஓ.என்.வி கலாச்சார அகாடமி முடிவு செய்துள்ளது.
ஞானபீட விருது பெற்றவர் தான் ஓஎன்வி குறுப், இவர் மிகச்சிறந்த மலையாள இலக்கியவாதியும் கூட. இவர் பெயரில் தான் கேரளாவில் ஆண்டுதோறும் "ஓஎன்வி குறுப்" என்ற விருது இலக்கியத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை இதுவரை சுகதகுமார், எம்.டி.வாசுதேவன், நாயர், அக்கிதம் அச்சுதன், நம்பூதிரி, லீலாவதி உள்ளிட்ட மலையாள இலக்கியவாதிகள் பெற்றுள்ளனர். இந்த நிலையில் 2020-ஆம் ஆண்டிற்கான இந்த விருதை முதன் முதலாக தமிழகத்தை சேர்ந்த கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்விருதிற்கு ரூ. 3 லட்சம் ரொக்கமும் கிடைக்கும். அண்மையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நேரில் சந்தித்து, வைரமுத்து அவர்களை வாழ்த்தினார்.
இதுகுறித்து முதல்வர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, "தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப் பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமையை கவிப்பேரரசு பெற்று, அன்னைத் தமிழுக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார். தமிழுக்கு பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம் சிறந்திட வாழ்த்துகள்’ என கூறியிருந்தார்.
ஆனால் "மீ டூ" விவகாரத்தில் வைரமுத்துவின் மேல் பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருந்ததால், இந்த விருதை அவருக்கு வழங்குவதில் பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இது போன்ற தொடர் எதிர்ப்புகள் வந்ததால், ஓ.என்.வி. ஆர்ட் மற்றும் கல்ச்சுரல் அகாடெமி, விருது குறித்து மறுபரீசலனை செய்ய வேண்டும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஓ.என்.வி. விருதை திருப்பி அளிக்கிறேன், அதற்காக வழங்கப்பட்டுள்ள பரிசுத்தொகை ரூ. 3 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்காக அளிக்கிறேன் என்று காணொளியுடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, "காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரீசிலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குருப்பையும் சிறுமைப்படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன். அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெற தவிர்க்கவே விரும்புகிறேன்.
ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன். மற்றும் மலையாள மண்மீதும் மக்கள் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பரிசுத்தொகையாக ரூ.2 லட்சத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்.
இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னை பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும் ஊடக உறவுகளுக்கும் என் நன்றி' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments