எனக்கு விருது கிடைத்ததில் தமிழுக்குத்தான் பெருமை. வைரமுத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா நடித்த 'தர்மதுரை' படத்தில் கவியரசர் வைரமுத்து எழுதிய 'எந்த பக்கம்' என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. வைரமுத்து அவர்கள் இந்த விருதை 7வது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் முதல்மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, ஆகிய ஆறு படங்களுக்கு எழுதிய பாடல்கள் மூலம் வைரமுத்து தேசிய விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியவிருது பெற்றது குறித்து கவியரசு வைரமுத்து கூறியபோது,'7வது முறையாக தேசிய விருது கிடைத்தது தமிழுக்கு கிடைத்த பெருமை; எனக்கு விருது கிடைத்ததில் பெருமை மொழிக்குதான் நான் வெறும் கருவிதான். நான் எழுதிய பாடல் தற்கொலைக்கு எதிரானது; தர்மதுரை படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றி' என்று கூறியுள்ளார்.
7வது முறையாக அவருக்கு தேசிய விருதை பெற்று தந்த 'எந்த பக்கம்' என்ற பாடல் இதுதான்:
எந்தப் பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நீ எந்தப் பாதை ஏகும் போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் பாடல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வு உண்டு
அட ரோராப் பூக்கள் அழகால் அது தேனை சிந்தும்
என் ராஜாப் பையன் நீ அழுதால் அதில் ஞானம் மிஞ்சும்
உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்
எந்தப் பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நீ எந்தப் பாதை ஏகும் போதும் ஊர்கள் உண்டு
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது
எப்போதுமே பகலாய்ப் போனால் வெப்பம் தாங்காது
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் துளி தான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய ஒரு காதல் நதி உண்டு
உன் சுவாசப் பையை மாற்று அதில் சுத்தக் காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில் வாழ்ந்து விடு
சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது
தாகம் தீரத் தானோ நீ தாய்ப் பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரே தெரியாதம்மா உயிரை தருகின்றாய்
உன் உச்சந்தலையை தீண்ட ஓர் உரிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே…
எந்தப் பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நான் எந்தப் பாதை ஏகும் போதும் ஊர்கள் உண்டு
நீ தாவித் தாவித் தழுகும் போதும் தாய்மை உண்டு
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும் போதும் நேர்மை உண்டு
உன் வார்த்தைக்கு பின்னால் என் வாழ்வே பின்னால்
உன் மடியில் எந்தன் கண்ணீர் வடியுமடி
உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout