'விவேகம்' படத்திற்கு வைரமுத்துவின் விமர்சனம் இதுதான்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் 'விவேகம்' படத்திற்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்த நிலையில் கவியரசு வைரமுத்து நேற்று தனது குடும்பத்துடன் 'விவேகம்' படம் பார்த்தார். படம் பார்த்த பின்னர் அவர் இந்த படம் குறித்த தனது கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். தனது மகன் 'கபிலன் வைரமுத்து' வசனம் எழுதிய இந்த படத்தின் நிறைகுறைகளை சுட்டிக்காட்டிய அவருடைய விமர்சனம் இதோ:
அஜீத் ரசிகர்களின் பாலாபிஷேகத்திற்கும், சில விமர்சனங்களின் குருதியாடலுக்கும் மத்தியில் இருக்கிறது விவேகம். ஓர் எதிர்காலத் தொழில்நுட்பத்தைக் கதையாடலுக்கு முன்னெடுத்துச் சென்ற முதல் முயற்சிக்காக இயக்குநர் சிவாவைப் பாராட்டலாம். காட்சி ஊடகத்தின் சகல சாத்தியங்களும் இதில் முயலப்பட்டுள்ளன. அஜீத்தின் உழைப்பு எனக்கு உடம்பு வலியை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு இயக்குநர் வெற்றி – கலை இயக்குநர் மிலன் இருவரின் திறமைகளும் என் கண்களை இமைக்கவிடவில்லை.
அனிருத்தின் பின்னணி இசை படத்தை இடைவெளியில்லாமல் நிரப்புகிறது. கதை இல்லை என்கிறார்கள். இதில் பாகப்பிரிவினையையும், பாசமலரையுமா சொல்ல முடியும்? இதற்கு இது போதும். ஏதோ ஓர் அந்நியத் தன்மை பட்டாம்பூச்சியின் இறகளவுக்குச் சுவர்கட்டி நிற்பதைச் சொல்லத்தான் வேண்டும்.
கபிலன் வைரமுத்துவின் சில வசன வரிகளை என் மகன் என்பதற்காக நான் மறைக்க விரும்பவில்லை. நீ சமவெளியில் ஓடுகிறாய்; ஓடத்தான் முடியும்; ஒளிய முடியாது`, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதைவிட, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்வதே வாழ்க்கை` போன்ற நல்ல வரிகளைக் காதுகள் மனப்பாடம் செய்துகொள்கின்றன.
பயம் கலந்த வீரம் தொனிக்கும் காஜல் அகர்வாலின் கண்கள், உறங்கிய பின்னும் முகத்துக்கு மேலே சில மில்லி மீட்டர் உயரத்தில் மிதக்கின்றன.
படம் சரியில்லை என்று சொல்கிறார்களே என்ற சலிப்போடுதான் போனேன். குறைகளைவிட நிறைகள் அதிகம் என்று கண்டு திரும்பினேன்.
விமர்சகர்கள் உணர்ந்ததை எழுதுங்கள்; ஆனால் வன்சொற்களைத் தவிருங்கள். ஒரு தோல்விப் படம்கூட 20 மாதப் பிரசவம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com