ஆண்டாளின் புகழ்பாட ஆசைப்பட்டது தவறா? வைரமுத்து உருக்கம்

  • IndiaGlitz, [Saturday,January 20 2018]

ஆண்டாள் குறித்த பெரும் சர்ச்சைக்கு நேற்று சென்னை ஐகோர்ட் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் 'நான் ஆண்டாளின் புகழ்பாட ஆசைப்பட்டது தவறா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இந்த வீடியோவில் அவர் மேலும் கூறியதாவது:

என் மனம் உடைக்கப்பட்டு கிடக்கிறது. ஆண்டாள் பிறந்த ஊரில் அவள் புகழ் பாட நான் ஆசைப்பட்டது தவறா? இது ஆண்டாளை பற்றி மட்டும் எழுதப்பட்ட கட்டுரை தொடர் அல்ல. 3000 ஆண்டுகளாக யார் யார் தமிழுக்கு தடம் சமைத்தவர்களோ அவர்களையெல்லாம் இந்த இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய ஆசைப்பட்டேன்.

இதுவரை திருவள்ளுவர், கம்பர், திருமூலர், இளங்கோவடிகள், அப்பர், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் என்று பரந்து விரிந்திருக்கிறது அந்த வெளி. நாயன்மார்களில் அப்பரை தேர்ந்தெடுத்த நான் ஆழ்வார்களில் ஆண்டாளை தேடி எழுத ஆசைப்பட்டேன். ஆண்டாள் பாசுரங்களை பாடப் பாட பக்தியில்லாத எனக்கு சக்தி பிறக்கிறது. தமிழ் வெளியில் கேட்ட முதல் விடுதலை பெண் குரல் ஆண்டாள் குரல் என்று அங்கு பதிவு செய்தேன்.

நம்மாழ்வார், சாமிக்கண்ணு பிள்ளை, ராகவ அய்யங்கார், கிருஷ்ணசாமி அய்யங்கார், ஒஷோ ஆகியோரை என் கருத்துக்கு பக்கத்தில் அழைத்து வந்த நான் கடைசியில் 86 வயது பேராசிரியர் ஒருவரின் ஆராய்ச்சி கட்டுரையை மேற்கோள் காட்டினேன். இத்தனைக்கும் பேசும்போதே இதை பக்தர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற எச்சரிக்கையோடு பேசுகிறேன். அது என் கருத்து என்று சொல்லவில்லை. பேராசிரியர்கள் நாராயணன் மற்றும் கேசவன் ஆகியோரின் கருத்து.

மேற்கோள் காட்டியவர்களே குற்றமற்றவர்கள் என்றிருக்கும்போது அதை மேற்கோள் காட்டிய நான் குற்றம் செய்தவன் ஆவேனா?

எனக்கு தாய்ப்பால் ஊட்டிய என் தாய் என்னை பெற்ற தாய், எனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய ஆண்டாள் நான் கற்ற தாய். இருவரையும் நான் ஒரே நிலையில் வைத்து பார்க்கிறேன். என்னை தமிழ் சமூகம் சந்தேகப்படலாமா? ஆண்டாளை நான் குற்றம் சொல்வதாக இருந்தால் அவள் மண்ணிலேயே போய் சொல்லியிருப்பேனா?

யாரோ மதம் கலந்த அரசியலுக்காக நான் பேசியதை திரித்து பரப்பியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கூட்டத்தில் நான் தமிழ் வளர்க்க வேண்டுமே என்று நான் வெட்கப்படுகிறேன். நான் ஆண்டாளை உயர்த்தி பேசியதை தாழ்த்து பேசியதாக திரித்து கூறுவது என்ன நியாயம்? எல்லா விஷத்தையும் நான் குடித்து கொள்கிறேன். என்னை ஆதரித்த தமிழ் சமூகம் அமிர்தத்தை மட்டும் அருந்தட்டும். யாருடைய மனமாவது புண்பட்டால் வருந்துகிறேன் என்று கேட்டது என்னுடைய மனிதாபிமானம்.

அதன்பிறகும் இவர்கள் இனக்கலவரத்தையும், மதக்கலவரத்தையும் தூண்ட நினைக்கிறார்கள் என்றால் தமிழ்ச் சமூகமே விழித்துக் கொள்

இவ்வாறு கவிஞர் வைரமுத்து அந்த வீடியோவில் பேசியுள்ளார்.