எம்ஜிஆர் படத்திற்கும் பாடல் எழுதிவிட்டேன்.. ஆனாலும் ஒரு மனக்குறை.. வைரமுத்து

  • IndiaGlitz, [Friday,May 17 2024]

கவியரசு வைரமுத்து, எம்ஜிஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லை என்ற கலைக்குறை தனக்கு இருந்ததாகவும் ஆனால் அந்த குறை தற்போது தொழில்நுட்ப மூலம் தீர்ந்துவிட்டது என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த 1980 ஆம் ஆண்டு ’நிழல்கள்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’இது ஒரு பொன்மாலை பொழுது’ என்ற பாடலை எழுதியதன் மூலம் திரைத்துறையில் பாடல் ஆசிரியராக வைரமுத்து அறிமுகமானார். அதன் பிறகு அவர் சுமார் 7500 பாடல்கள் எழுதி உள்ளார் என்பதும் ஆறு தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆறு விருதுகளில் நான்கு விருதுகள் அவர் ஏஆர் ரகுமான் இசைக்கு பாடல் எழுதிய போது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் பாடல் எழுதிவிட்ட வைரமுத்து தற்போது எம்ஜிஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லை என்ற தனது கலைக்குறை தீர்ந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

எம்ஜிஆர் , பானுமதி நடித்த ’அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு பின்னணியாக வைரமுத்து எழுதிய ’மலரே மௌனமா’ என்ற பாடலை இணைத்து நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை தந்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த வைரமுத்து கூறி இருப்பதாவது:

எங்கிருந்தோ
எனக்கொரு பாடல் வந்தது
வியந்தும் மகிழ்ந்தும் போனேன்

அலிபாபாவும்
40 திருடர்களும் படத்தில்
எம்.ஜி.ஆரும் பானுமதியும் நடித்த
புகழ்பெற்ற பாடல் காட்சியோடு
நான் எழுதிய பாடல் ஒன்றைப்
பொருத்தியிருக்கிறார்கள்

எம்.ஜி.ஆருக்குப்
பாடல் எழுதவில்லையே
என்ற கலைக்குறை
தொழில்நுட்பத்தால் தீர்ந்தது

ஆனால்,
வேறொரு குறை வந்துவிட்டது

இதைக் கண்டு களிப்பதற்கு
எம்.ஜி.ஆரும் பானுமதியும்
இன்றில்லையே!