இவர் வரிகள் இல்லாதது மணி ரத்னத்திற்கு இழப்பா...? படத்திற்கு இழப்பா...? வைரமுத்துவிற்கு இழப்பா....?
- IndiaGlitz, [Friday,August 06 2021]
தமிழ் சினிமா வரலாற்றில் கடந்த 30 வருடங்களில் முதன்முறையாக கவிஞர் வைரமுத்துவை, இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தவிர்த்துள்ளார்.
மணிரத்னம், ரஹ்மான், வைரமுத்து கூட்டணி என்றாலே மாபெரும் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு இவர்களின் படங்கள் அமைந்திருக்கும். மணிரத்னம் படங்கள் குறித்து முதன்முதலாக பெரும்பாலும் சமூகவலைத்தளங்களில் பகிர்பவர் வைரமுத்து தான். ஆனால் இப்படி இருந்தவர்கள் நட்பில் தற்போது சிறிய விரிசல் விழுந்துள்ளது. இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில், ஒரு பாடலைக் கூட வைரமுத்து எழுதவில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்கள் கூறினால் தான் உண்மை நிலவரம் என்ன என்று ரசிகர்களுக்கு புரியும்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில், 8 பாடல்களை எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணனும், பிற பாடல்களை வைரமுத்துவின் மகன் கபிலன் மற்றும் வெண்பா கீதையன் ஆகியோர் எழுதியுள்ளனர். மணிரத்னம் படங்களில் நறுமுகையே, நெஞ்சினிலே, போன்ற அற்புதமான தரமான பாடல்களையும், காலத்தால் அழியாத பாடல் வரிகளையும் தந்தவர் தான் வைரமுத்து. ஆனால் காவியமான பொன்னியின் செல்வன் படத்தில், வைரமுத்துவை ஏன் தவித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்திரைப்படத்தில் இவரின் வரிகள் இடம்பெறாதது மணிரத்னத்திற்கு இழப்பா...? படத்திற்கு இழப்பா...? வைரமுத்துவிற்கு இழப்பா....? என்ற குழப்பமிகு கேள்வி சினிமா ரசிகர்கள் மத்தியில், இன்னும் நீங்காமல் எழும்பி வருகிறது.