தமிழ்ச் சமூகத்தை புண்படுத்துவேனா? வைரமுத்துவின் உருக்கமான விளக்கம்
- IndiaGlitz, [Sunday,January 14 2018]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாக சொல்லப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழகம் மூழுவதும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்தை வைரமுத்து வாபஸ் பெறவேண்டும் என்றும் ஆண்டாள் சந்நிதியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் அவர்மீது இராஜபாளையம் மற்றும் சென்னை காவல்நிலையங்களில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஆண்டாள் குறித்து தவறாக எதுவும் கூறவில்லை என்றும், தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும், வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தனது விளக்கத்தில் கூறியதாவது:
தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறகாக புரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும். அப்போது என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று விளங்கும். தங்கள் வீட்டில் ஒரு சகோதரனாய் நினைக்கும் தாயுள்ளங்கள் அதனை தவறாகப் புரிந்து கொள்ள கூடாது. என் மனம் துடிக்கிறது.
தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் உயர்ந்தப் பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக்கொண்ட உயர்ந்தப் பெண்களுக்கே தேவரடியார் அல்லது தேவதாசி என்ற பெயர்கள் வழங்கப்பட்டு வந்தன. அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவர்கள். பின்னாளில் தேவதாசி என்ற பொருள் நிலவுடைமைச் சமூகத்தால் பொருள் மாற்றம் பெற்றது.
தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த பேராளுமைகள் குறித்து நாளிதழ் ஒன்றில் எழுதி வருகிறேன். அந்த வரிசையில் ஆண்டாளின் பெருமையும் எழுத நினைத்தேன். இதனால் ஆண்டாளைப் பற்றி மூன்று மாதங்கள் அரிய நூல்களை படித்து தகவல் திரட்டி வருகிறேன். அந்தவகையில் சுபாஷ் சந்திர மாலிக் தொகுத்து அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு நூல்களையும் படித்தேன். அதில் “Bhakti Movement in South India” என்ற கட்டுரையைக் கண்ணுற்றேன். அந்தக் கட்டுரை நாராயணன், கேசவன் ஆகிய அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டது. அதில் நாராயணன் இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தில் தலைவராக இருந்தவர். அந்தக் கட்டுரையில் அவர் எழுதிய ஒரே வரியைத் தான் மேற்கோளாக எடுத்தாண்டிருந்தேன். அவர்கள் தேவதாசியை எப்படி உயர்ந்தப் பொருளில் கொண்டிருந்தார்களோ, நானும் அதே உயர்ந்த பொருளில் தான் கையாண்டிருக்கிறேன்.
இதை புரிந்துகொண்டால் எவர் மனமும் புண்பட வேண்டிய அவசியம் இல்லை. 46 ஆண்டுகளாக தமிழோடு வாழ்ந்த வருகின்ற நான் என்னை உயர்த்திய தமிழ்ச் சமூகத்தை புண்படுத்துவேனா? எழுத்தின் பயன் அன்பும் இன்பமும் மேன்மையும் என்று கருதுபவன் நான். ஆண்டாள் தமிழை வணங்குபவன் நான். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். என்பதே எல்லோருக்கும் என் அன்பான வேண்டுகோள்”
இவ்வாறு கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.