இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்: வைரமுத்து இரங்கல்

  • IndiaGlitz, [Wednesday,January 17 2018]

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ்.படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவர் இன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது சடலம் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் இன்சுலின் அவரது உடலில் செலுத்தப்பட்டுள்ளதால் மரணம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இன்சுலீனை மாணவரே செலுத்தி கொண்டாரா? என்பது குறித்த மர்மமும் நீடித்து வருகிறது.

டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர்கள் திடீரென மாயமாக மறைவதும் மர்மமாக மரணம் அடைவதும் கடந்த சில மாதங்களாக தொடர்கதையாக இருந்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள கவியரசர் வைரமுத்து, 'டெல்லி மருத்துவக் கல்லூரித் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ச்சியான மரணங்கள் ஆரோக்கியமானதில்லை. மாணவர்கள் இறக்கிறார்கள்; மரணங்கள் இறக்கவில்லை. காரணம் கண்டறியப்பட வேண்டும். இந்த வகையில் இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும். குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்' என்று தெரிவித்துள்ளார்,.