பாவம் போக்கும் வைகுண்ட ஏகாதசி
Send us your feedback to audioarticles@vaarta.com
வைணவக் கடவுளான திருமால் வசிக்கும் இடம் வைகுண்டம் என்று நம்பப்படுகிறது. மார்கழி மாதத்து வளர்பிறை – பதினோராம் நாளில் பெருமாள் தமது அருளினால் இந்த வைகுண்டத்தின் கதவுகளைத் தமது பக்தர்களுக்காகத் திறந்து வைத்து அருள்பாலிக்கிறார் எனவும் கருதப்படுகிறது.
பெருமாள் கோவில்களில் வடக்குத்திசையில் உள்ள கதவுகள் பெரும்பாலும் திறக்கப் படாமலேயே இருக்கும். வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டும் இக்கதவுகள் தரிசனத்திற்காகத் திறந்து வைக்கப்படுகின்றன. மார்கழி, வளர்பிறை - பதினோராம் நாளில் திறக்கப்படும் பெருமாள் கோவில்களின் வடக்குத்திசை கதவுகளே ‘சொர்க்க வாயில்’ என்று வைணவர்களால் நம்பப்படுகின்றன. ஏகாதசிக்கு முன்னிரவில் பக்தர்கள் திருமாலின் புகழினைப் பாடியும் இசைத்தும் உறங்காது விழித்திருந்து, கோவிலின் கதவு திறப்புக்காகக் காத்திருப்பர். அதிகாலையில் திறக்கப்படும் இக்கதவுகள் வழியே சென்று பெருமாளை வழிபடுவர்.
ஏகாதசி உருவான வரலாறு
பத்ம புராணம் ஏகாதசி உருவான கதையை விளக்குகிறது. சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் (முரன்) என்ற அரக்கனும் அவனுடைய மகனான மருவாசுரனும் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். அவர்களை சமாளிக்க முடியாத அசுரர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு பகவான் அந்த அசுரர்களை எதிர்த்துப் பல வருடங்களாகத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டே இருந்தார். போரிட்டுக் கொண்டே இருந்ததால் விஷ்ணு பகவானுக்கு களைப்பு ஏற்பட்டு ஒரு குகையினுள் ஆழ்ந்து உறங்கத் தொடங்கினார்.
விஷ்ணு பகவான் சோர்வடைந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது அவருடைய உடலிலிருந்து ஒரு பெண் சக்தி தோன்றி போர் நடக்கும் இடத்திற்குச் சென்று அந்த அரக்கர்களை எதிர்த்து போரிட்டு அவர்களை வீழ்த்தியது. பின்னர் தன் எதிரே நின்ற அந்தப் பெண் சக்தியைக் கண்ட விஷ்ணு பகவான் அதனை போற்றி, “ஏகாதசி” என்று பெயரும் சூட்டினார். நீ தோன்றிய இந்நாளில் யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணையாக இரு என்று வாழ்த்தி அந்தப் பெண் சக்தியை தன்னுள் இணைத்துக்கொண்டார் விஷ்ணு. இவ்வாறு ஏகாதசி விஷ்ணுவிலிருந்து தோன்றிய ஒரு பெண் சக்தி என்று பத்ம புராணம் எடுத்துக்காட்டுகிறது.
ஏகாதசியின் சிறப்பு
விஷ்ணு புராணத்தில் வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாட்களிலும் உண்ணா விரதமிருந்து அடையும் பயன் அனைத்தையும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதமிருந்தால் பெற்றுவிடலாம் என்கிறது.
விஷ்ணு புராணத்தில் இது குறித்து ஒரு கதையும் குறிப்பிடுகிறது. விஷ்ணு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொழுது அவருடைய இரு காதுகளிலிருந்தும் மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றி, தேவர்களைத் துன்பப்படுத்தத் தொடங்கினர். அவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் விஷ்ணுவின் சக்தியால் உருவான அரக்கர்களை விஷ்ணுவின் வலிமையால் தான் தடுக்க முடியும் என் உணர்ந்து விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
விஷ்ணு பகவான் மது, கைடபர் என்ற இரு அரக்கர்களுடன் போர் புரியத் தொடங்கினார். அரக்கர்கள் இருவரும் பகவானுடன் போரிட இயலாமல் சரணடைந்தனர். அரக்கர்களாக இருந்தாலும் விஷ்ணுவிடம் தங்களது செயலுக்கு மன்னிப்புக் கேட்டதால் வைகுண்டத்தில் தன்னுடன் இருப்பதற்கு வரத்தைக் கொடுத்தார். வரத்தைப் பெற்ற இரு அரக்கர்களும் தங்களைப் போலவே மற்றவர்களும் பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணி வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து சொர்க்க வாசல் வழியாக பெருமாளைத் தரிசிப்பவர்களுக்கு அவர்களின் பாவங்களைப் போக்கி அருளுமாறு வேண்டினர். அரக்கர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட விஷ்ணு வைகுண்ட ஏகாதசியன்று தன்னைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு அவர்களின் பாவங்களைப் போக்கி அருள்புரியத் தொடங்குகிறார்.
ஏகாதசி விரதம்
ஏகாதசி நாட்களில் அரிசி உணவுகள் தவிர்க்கப்படுகின்றன. ஏகாதசி நாட்களில் சாப்பிடப்படும் அரிசியில் பத்ம புராணத்தில் குறிப்பிடப்படுகிற தேவர்களைத் துன்புறுத்தும் முரன் என்ற அரக்கன் குடியிருப்பதாக நம்பப்படுகிறது.
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலில் மந்திர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினைக் கயிறாகவும் கொண்டு அமுதத்தினைக் கடைந்த நாள் வைகுண்ட ஏகாதசி என்றும் நம்பப்படுகிறது. குருசேத்திர போரில் விஷ்ணு பகவான் அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசம் செய்த நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.
வைகுண்ட நாளன்று இறப்பவர்களுக்கு நேரடியாக சொர்க்கம் கிடைக்கப்பெறும் என்றும் பொதுவான நம்பிக்கை உண்டு. இந்நாளன்று பெருமாளை நினைத்து விரதமிருந்து பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவதால் செல்வம் பெருகும் எனவும் நம்பப்படுகிறது. இந்நாளின்போது விரதமிருந்து தாங்கள் செய்கின்ற பாவச்செயல்களுக்குப் பெருமாளிடம் மன்னிப்புக்கோரினால் அதனால் வருகின்ற தீவினைகள் குறைந்து புண்ணியத்தைப் பெற முடியும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சிறப்பு வழிபாடு
தமிழ்நாட்டில் திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 21 நாட்கள் சிறப்பு விழா எடுக்கப்படுகிறது. ஏகாதசிக்கு முதல் பத்து நாட்கள் ‘பகல்பத்து’ என்றும் பிந்தைய பத்து நாட்கள் ‘இராபத்து’ என்றும் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருமாலுக்கு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பான உலாவும் வழிபாடுகளும் நடைபெறுகிறது.
ஆந்திரா , திருமலையில் வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்கள் தரிசனம் செய்வதை தங்களது வாழ்நாள் புண்ணியமாகக் கருதுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com