என்ன புரட்சி செய்கிறார்கள் என்று பார்க்கலாம்: கமல்-ரஜினியை கிண்டல் செய்த வைகோ

  • IndiaGlitz, [Thursday,January 18 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமே அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அரசியலுக்கு வரப்போவதாக கூறியபோது ஆதரவு கொடுத்த பல அரசியல் கட்சி தலைவர்கள், தற்போது இருவரும் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டவுடன் மறைமுக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ரஜினிக்கும் கமலுக்கும் கடந்த சில மாதங்கள் வரை ஆதரவு கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது இருவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

கமல், ரஜினி அரசியல் வருகை குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த வைகோ, 'எப்படி ஓட்டு போடுவதற்கு எல்லோருக்கும் ஜனநாயக உரிமை இருக்கிறதோ, அதேபோல கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது.  என்னுடைய  54 வருட பொதுவாழ்க்கையில், 50 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று, கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்திருக்கிறேன். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைப்பயணமாகவும் சென்றிருக்கிறேன். 5 வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறேன். மக்களைப் பற்றி நான் நன்றாக அறிவேன்.

கமலும் ரஜினியும், ஏதோ திடீர் புரட்சி செய்து, தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று முயல்கிறார்கள். அவர்கள் இருவரும் அப்படி என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை காலம் தெளிவுபடுத்தும் என்று கிண்டலுடன் நக்கல் சிரிப்புடன் பதிலளித்தார்.