பிரபாகரனுடன் சீமான் போட்டோ எடுக்கவே இல்லை, எல்லாம் கிராபிக்ஸ்: வைகோ அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Wednesday,April 04 2018]
கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதில் சுட்டுக்கொல்லப்பட்ட மாயக்காள் உள்ளிட்ட 16 பேரின் 98ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:
பிரபாகரன் உயிரோடு இல்லை என்று கருதி கொண்டு சீமான், புலிகளின் சின்னத்தை தனது கட்சியின் கொடியில் பயன்படுத்தி வருகிறார். பிரபாகரனை சீமான் வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டது. அவருடன் புகைப்படம் எடுக்க கூட சீமானுக்கு அனுமதி தரப்படவில்லை. பிரபாகரனுடன் சீமான் இருப்பதாக வெளிவந்துள்ள புகைப்படங்கள் அனைத்துமே கிராபிக்ஸ்
அதேபோல் புலிகள் சீரூடை அணியவும் சீமானை பிரபாகரன் அனுமதிக்கவில்லை. ஆனால் புலிகள் சீருடையில் பிரபாகரனுடன் நான் ஒருமாதம் தங்கியிருந்தேன். பிரபாகாரனிடம் ஆயுதப்பயிற்சி பெற்று மயிரிழையில் உயிர் பிழைத்தவன் நான்.
உலக நாடுகளில் நான் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறி கோடிக்கணக்கில் வசூல் செய்தவர் சீமான். இதனை அறிந்து அந்த கட்சியில் உள்ள பலர் விலகிவிட்டனர். நான் பிரபாகரனுடன் வேட்டைக்கு போனேன், ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சீமான் சொல்வது அனைத்துமே பொய். இவ்வளவு அநியாயம், அக்கிரமங்கள் செய்துவிட்டு என்னைப்பற்றி தவறாக மீம்ஸ் போட்டு என்னை ரொம்ப டேமேஜ் பண்ணுகின்றனர். இவர்கள் இதனை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்று வைகோ, நாம் தமிழர் கட்சியினர்களை எச்சரித்துள்ளார்.