ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது ஜனநாயக உரிமை. வைகோ

  • IndiaGlitz, [Wednesday,December 27 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றைய ரசிகர்கள் சந்திப்பின் முதல் நாளில், வரும் 31ஆம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவிருப்பதாக தெரிவித்தார். அவர் என்ன கூறுவார் என்று தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் இதுகுறித்து கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் இன்று மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதுகுறித்து கூறியதாவது:

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் கூறிய கருத்து, அந்த தேர்தலில் பிரதான தேர்தல் பிரச்சார மந்திரமாக பயன்படுத்தப்பட்டது. அதனால்தான் அவர் இப்போது சொல்கிறார், நான் 96ல் இருந்தே அரசியலில் இருக்கின்றேன் என்று.

அரசியலை யுத்தம் என்றும் யுத்தத்திற்கு போனால் ஜெயிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார். அரசியலுக்கு வியூகம் மிகவும் அவசியம் என்று சொல்லியிருக்கின்றார். வரும் 31ஆம் தேதி அரசியல் குறித்து தன்னுடைய முடிவை கூறிவதாக சொல்லியிருக்கின்றார்.

இன்னும் மூன்று நாட்கள் தான் உள்ளது. அவர் என்ன அறிவிப்பை அறிவிக்க இருக்கின்றார் என்பதை தமிழக அரசியல் உலகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றது. அரசியலில் அவர் பிரவேசிப்பதாக அறிவித்தால் அது ஜனநாயகத்தில் இருக்கும் அவரது உரிமை. ரஜினி எனக்கு நல்ல நண்பர், அவரை நான் மதிக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.