வைகோவின் உறவினர் தீக்குளிப்பு
- IndiaGlitz, [Friday,April 13 2018]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தொண்டர் ஒருவர் சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து பரிதாபமாக பலியானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வைகோவின் நெருங்கிய உறவினர் ஒருவர் இன்று காவிரி பிரச்சனைக்காக தீக்குளித்துள்ளார். இந்த சம்பவம் வைகோவையும் அவரது குடும்பத்தினர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இன்று காலை விருதுநகரில் வைகோவின் மைத்துனர் சரவண சுரேஷ் என்பவர் திடீரென விருதுநகர் விளையாட்டு மைதானம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். சரவண சுரேஷின் உடலில் 80% தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருமகன் தீக்குளித்த தகவல் அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்த வைகோ, இனிமேல் யாரும் தயவுசெய்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கைக்கூப்பி கேட்டுக்கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.