ஆர்.கே ஐடியாவை பின்பற்றுவார்களா புதிய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்?

  • IndiaGlitz, [Saturday,March 11 2017]

இந்த 21ஆம் நூற்றாண்டில் வானளவு வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் பயன்படுத்தி கற்பனைக்கும் எட்டாத முன்னேற்றங்களை சந்தித்து வருகிறது. திரைத்துறைகளும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் உள்பட பல லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை திரைப்படங்களில் பயன்படுத்தி வந்தாலும் வியாபார ரீதியில் இன்னும் 50 வருடங்களுக்கு முந்தைய முறையே பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் முதல்முறையாக 'வைகை எக்ஸ்பிரஸ்' படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே ஒரு வித்தியாசமான வியாபார முறையை தனது படத்தில் அறிமுகம் செய்கிறார். தியேட்டரில் படம் பார்க்க விரும்புபவர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுக்களை புக் செய்ய ஒரே காரணம், தியேட்டருக்கு சென்று வரிசையில் நிற்பதை தவிர்க்கத்தான். ஆனால் இதற்காக அவர்கள் ஆன்லைன் நிறுவனங்களுக்கு செலுத்தும் சேவை வரி ஒரு டிக்கெட்டுக்கு ரூ.30 என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கேதான் ஆர்கேவின் ஐடியா ஆரம்பமாகிறது. வைகை எக்ஸ்பிரஸ்' படத்திற்காக இவர் தமிழகம் முழுக்க 1000 விநியோகிஸ்தர்களை நியமனம் செய்துள்ளார். இவர்கள் வீடு வீடாக சென்று டிக்கெட்டுகளை தேவையானவர்களுக்கு டெலிவரி செய்கின்றனர். அதுமட்டுமின்றி இரண்டு டிக்கெட் வாங்கினால் மூன்று டிக்கெட் இலவசம் என்ற சலுகையும் உண்டு. இதனால் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட் வாங்கினால் போதும். ரசிகர்களுக்கு ஆன்லைன் சேவை வரி மிச்சம் ஆகுவதோடு, இலவச டிக்கெட்டுக்களும் கிடைக்கின்றது. .
ஆன்லைனில் டிக்கெட்டுக்கள் புக் செய்யப்படுவதால் தயாரிப்பாளருக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதை முதன்முதலாக ஆர்கே, தயாரிப்பாளர்களுக்கு புரிய வைத்துள்ளார். இதேபோல் பல ஐடியாக்கள் வைத்துள்ள ஆர்கேவிடம் தேர்தலில் வெற்றி பெறும் புதிய நிர்வாகிகள் ஆலோசனை செய்து பின்பற்றினால் தயாரிப்பு நிறுவனங்கள் ஆரோக்கியமான பாதைக்கு செல்லும் என்பதே அனைத்து தயாரிப்பாளர்களின் கருத்தாக உள்ளது.