நான் நடிச்ச காமெடி இப்ப உலகத்துக்கே பொருந்துதே: கொரோனா குறித்து வடிவேலு

  • IndiaGlitz, [Thursday,May 20 2021]

நான் நடித்த காமெடி ஒன்று தற்போது உலகத்துக்கே பொருந்தி வருவதாக நடிகர் வடிவேலு பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து முன்னணி ஊடகமொன்றுக்கு வைகைப்புயல் வடிவேலு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: தற்போது கொரோனா என்ற ஒன்று அச்சத்தை கிளப்பி வருகிறது. யாரையும் தொட்டு பேசக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு நாளைக்கு நம்மை அறியாமல் நம்முடைய கை இருநூறு தடவை மூக்கு வாய்க்குள் செல்கிறது. அது எப்படி கண்ட்ரோல் செய்ய முடியும்? மருத்துவ உலகத்தையும் மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது இந்த கொரோனா. இதுவரை யாருமே இப்படி ஒரு நிலையை பார்த்ததில்லை.

இப்பொழுது படம் எடுக்க யாரும் முன்வருவதில்லை. படத்தை தயாரிக்கவும், நடிக்க வருவதற்கு யாரும் தயாராக இல்லை. ஆனால் இறைவன் ’கொரோனா’ என்னும் திரைப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். இந்த படத்தை எல்லோரும் வீட்டுக்குள் இருந்து பாருங்கள் என்று இறைவன் கூறுகிறான். நாம் ஒரு படத்தை ரிலீஸ் செய்தால் மக்கள் அதை தூக்குவார்கள். ஆனால் இறைவன் ரிலீஸ் செய்த இந்த படத்தை அவனே தான் தூக்க வேண்டும். அவன் எப்போது தூக்குவான் என்று தெரியவில்லை. அவன் இந்த படத்தை தூக்கினால் தான் நாம் எல்லோரும் வெளியே வரமுடியும்.

ஒரு படத்தில் நான் சும்மா இருப்பது எப்படி என்று கூறுவது போல் ஒரு நகைச்சுவை காட்சியில் நடித்துள்ளேன். ஆனால் இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் சும்மா இருந்து கொண்டிருக்கிறார்கள். நான் நடித்த அந்த காமெடி காட்சி இந்த உலகத்துக்கே இன்று பொருந்துகிறது என்று நடிகர் வடிவேலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.