Vada Chennai Review
'வடசென்னை' - தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு லோக்கல் கேங்க்ஸ்டர்
தனுஷ், வெற்றி மாறன் கூட்டணியில் வெளியான 'பொல்லாதவன்' மற்றும் 'ஆடுகளம்' இரண்டுமே விருதுகள் பெற்று வசூலையும் குவித்ததால் அதே கூட்டணியில் உருவான 'வடசென்னை' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த கூட்டணி பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்
கேரம் போர்டு பிளேயரான சிறுவயது தனுஷ், விளையாட்டு, ஐஸ்வர்யா ராஜேஷூடன் மோதல் அதன் பின்னர் காதல் என்று இருக்கும் நிலையில் திடீரென அவரது வாழ்க்கையில் ஒரு கொலையால் திருப்பம் ஏற்படுகிறது. அந்த கொலையில் இருந்து தன்னை பாதுகாக்க வடசென்னையில் இருக்கும் ஒரு கேங்ஸ்டர் தலைவரான சமுத்திரக்கனியிடம் தனுஷ் தஞ்சமாக, அவர் தனுஷை காப்பாற்றுகிறார். ஆனால் அதற்கு பதில் சமுத்திரக்கனி ஒரு பிரதியுபகாரம் கேட்க அதனால் தனுஷின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் அதன்பின் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை
அன்பு கேரக்டர் தனுஷூகு புதிது அல்ல. புதுப்பேட்டை கொக்கி குமாரின் இன்னொரு வடிவம்தான். அவரது நடிப்பில் அனேகன், புதுப்பேட்டை, ஆடுகளம் சாயல் தெரிந்தாலும் படத்தை தூக்கி நிறுத்துவது தனுஷ் தான். கேரம் போர்டு விளையாட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்ற அமீரின் கனவை நிறைவேற்ற விரும்புவதும், ஆனால் அமீரின் மரணத்தால் தனது வாழ்க்கை பாதை திசை திரும்பியதும், அதன் பின்னர் அமீர் விட்ட வேலையை தன் கையில் எடுத்து தொடர்வதையும் தனது நடிப்பால் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார்.
தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காட்சிகளில் சுட்டித்தனமான நடிப்பில் ஓகே. அதன்பின் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான நடிப்பு இல்லை. ஆண்ட்ரியாவுக்கு வெயிட்டான கேரக்டர். முடிந்த அளவு அந்த கேரக்டரை உள்வாங்கி நடித்துள்ளார். அமீர் தனது கேரக்டரின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்துள்ளார். குறிப்பாக போலீஸ் அதிகாரியிடம் தில்லாக பேசுவது, தனது கூட்டாளிகளாக சமுத்திரக்கனி குரூப்பிடம் எம்ஜிஆர் கால அரசியல் பேசுவது சூப்பர்
கிஷோரின் நடிப்பு ஓகே என்றாலும் வடசென்னை ஸ்லாங் அவருக்கு சுத்தமாக வரவில்லை என்பது பெரிய மைனஸ். சமுத்திரக்கனி வழக்கம்போல் பின்னி பிடலெடுத்திருக்கின்றார். ராதாரவி, டேனியல் பாலாஜி உள்பட மற்ற கேரக்டர்களை பொருத்தமாக தேர்வு செய்து அவர்களிடம் இருந்து தேவையான நடிப்பை பெற்றதில் இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசை ஒரு கேங்க்ஸ்டர் படத்திற்கு பொருத்தமாக அமைத்துள்ளார். இந்த படத்தின் இன்னொரு நாயகன் என கலை இயக்குனர் ஜாக்கியை கூறலாம். குறிப்பாக ஜெயில் செட்டை கண்முன் பிரம்மாதமாக நிறுத்தியுள்ளார். அதேபோல் வேல்ராஜின் கேமிரா அற்புதம் செய்துள்ளது. ஆக்சன் காட்சிகள் உள்பட பல காட்சிகள் இருட்டில் இருந்தாலும் ஒளிப்பதிவு பிரம்மாதம். படத்தின் நீளம் இரண்டே முக்கால் மணி நேரம் என்பது கொஞ்சம் அதிகம்தான். எடிட்டர் நீளத்தை குறைத்திருக்கலாம். மற்ற இரண்டு பாகங்களையாவது இரண்டு மணி நேர படமாக முடிப்பார்கள் என்று நம்புவோம்
தமிழில் பல கேங்கஸ்டர் படம் வெளிவந்திருந்தாலும் வெற்றிமாறனின் கேங்க்ஸ்டர் படம் என்றால் அதில் ஒரு வித்தியாசம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. இந்த படத்தின் திரைக்கதை ஆழமாக இருந்தாலும் கொஞ்சம் மெதுவாக நகர்வது போல் தெரிகிறது. மேலும் அதிகப்படியான கேரக்டர்கள் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. வடசென்னை கேங்கஸ்டரின் வாழ்க்கை முறைகளை இயக்குனர் பல வருடங்கள் அலசி ஆராய்ந்திருப்பது திரைக்கதையில் தெரிந்தாலும் அனைத்து தரப்பு ஆடியன்ஸ்களுக்கும் இந்த படம் பிடிக்குமா? என்பது சந்தேகமே!
குப்பத்து ஜனங்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து நன்மை செய்யுங்கள், அவர்களை காலி செய்ய சொல்ல வேண்டாம், முட்டாள்தான் விசுவாசியா இருப்பான், நம்ம ஊரை முன்னேற்றம் செய்ய வேற எவனும் வர மாட்டான், நாம தான் பண்ணனும் போன்ற வசனங்கள் இன்றைய அரசியல் நிலையின் வெளிப்பாடாக இருப்பது படத்தின் பிளஸ். ஆனால் அதே நேரதில் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட படத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களும் கெட்ட வார்த்தை பேசுகின்றனர். என்னதான் 'ஏ' சான்றிதழ் என்றாலும் இப்படியா?
'மகாநதி' படத்திற்கு பின்னர் அதிக ஜெயில் காட்சிகள் உள்ள படம் என்பதும், ஜெயில் காட்சிகள் அனைத்தும் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத காட்சிகள் என்பதும் படத்தின் இன்னொரு பிளஸ்
மொத்தத்தில் தனுஷின் நடிப்பு, வெற்றிமாறனின் திரைக்கதை, சுவாரஸ்யமான வடசென்னை கேங்க்ஸ்டர் காட்சிகள் ஆகியவைகளுக்காக இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்
- Read in English