உழைப்பாளிகளுக்கு பெருமை சேர்த்த தமிழ் சினிமா
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று மே-1, உழைப்பாளர்கள் தினம். வருடம் முழுவதும் உழைக்கும் உழைப்பாளர்களை பெருமைப்படுத்த அவர்களுக்கு என்று ஒரு நாள் கொண்டாடப்படும் தினம்.
தொழிலாளர்களின் பெருமைகளை தமிழ் சினிமாவும் அவ்வப்போது வெளியான படங்களில் இருந்து வெளிப்படுத்தியுள்ளது. எம்ஜிஆர், சிவாஜி முதல் தற்போதைய இளையதலைமுறை நடிகர்கள் வரை தொழிலாளர்களின் பெருமைகளை தங்கள் படங்கள் மூலம் விளக்கியுள்ளனர். அவ்வாறு உழைப்பாளிகளை உயர்வாக காட்டிய ஒருசில தமிழ் திரைப்படங்களை தற்போது பார்ப்போம்
எம்.ஜி.ஆர் - தொழிலாளி: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பல படங்களின் தொழிலாளியாக, உழைப்பாளியாக நடித்துள்ளார். அவர் முதலாளியாக நடித்த படங்கள் மிகக்குறைவு. குறிப்பாக 'தொழிலாளி' என்ற படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த படம் தொழிலாளர்களை போற்றும் வகையில் இருந்தது. தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் எம்.ஜி.ஆர் பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் கேரக்டரில் நடித்திருப்பார். மேலும் எம்.ஜி.ஆர் அவர்கள் 'ரிக்சாக்காரன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் உழைப்பாளியாக நடித்து அனைவரின் மனதை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இரும்புத்திரை- சிவாஜிகணேசன்: கடந்த 1960 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எஸ். வி. சுப்பையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஆலை அதிபர் எஸ்.வி.ரங்காராவ், அவரது மகளாக சரோஜாதெவி, இன்னொரு மகளாக வைஜெயந்திமாலா, அந்த ஆலையில் பணிபுரியும் அண்ணன் தம்பிகளாக சிவாஜிகணேசன் மற்றும் எஸ்.வி.சுப்பையா ஆகியோர் நடித்திருப்பார்கள். ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகள் இருவரின் பக்கத்திலும் உள்ள நியாய, அநியாயங்கள் இந்த படத்தில் மிக அழகாக காண்பிக்கப்பட்டிருக்கும்
கமல்ஹாசன் - நானும் ஒரு தொழிலாளி: பிரபல இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கமல்ஹாசன், அம்பிகா நடித்த இந்த படம் 1986ஆம் ஆண்டு வெளியானது. தொழிலாளர்களின் பிரச்சனைகளை ஸ்ரீதர் மிக அருமையாக காதல் மற்றும் நகைச்சுவை காட்சிகளுடன் ஜனரஞ்சகமாக இயக்கிய படம் இது. மேலும் இந்த படம் மே 1ஆம் தேதி வெளிவந்தது என்பது இன்னொரு சிறப்பு
ரஜினிகாந்த் - உழைப்பாளி: 20 வருட இடைவெளிக்கு பின்னர் விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ரஜினிகாந்த், ரோஜா, உள்பட பலர் நடித்தனர். ரஜினி ஒரு பேக்டரியில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். மூன்று வில்லன்கள் அவரை அந்த பேக்டரியின் உரிமையாளர் போல வெளிநாட்டில் இருந்து வந்தவர் போல நடிக்க சொல்வார்கள். ஆனால் போக போக உண்மையில் அந்த பேக்டரியே தன்னுடைய தந்தையின் பேக்டரி என்றும் தன்னுடைய தந்தையை அந்த மூன்று பேரே கொலை செய்தனர் என்றும், தாய் சுஜாதா மனநிலை சரியில்லாமல் இருப்பதையும் கண்டுபிடித்து அந்த பேக்டரியை மிட்பார். இருந்தும் கடைசியில் பேக்டரியின் முதலாளியாக இல்லாமல் உழைப்பாளியாகவே வாழ விரும்பும் கதை. பி.வாசு இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது.
விஜயகாந்த் - சிவப்பு மல்லி:
எரிமலை எப்படி பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
'சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்
துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்.
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி
ஒவ்வொரு ஆண்டும் மே தின கொண்டாட்டங்களில் இந்த பாடல்தான் முதலில் ஒலிக்கும். அந்த அளவுக்கு உழைப்பாளிகளின் பெருமைகளை கூறிய இந்த பாடலை கேட்டாலே முறுக்கேறும்.
கடந்த 1981ஆம் ஆண்டு ராமநாராயணன் இயக்கத்தில் விஜயகாந்த், சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் வில்லன் பேக்டரில் வேலை செய்யும் தொழிலாளர்களாக விஜயகாந்த் மற்றும் சந்திரசேகர் நடித்திருந்தனர். பேக்டரி தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடும் கேரக்டர்களில் நடித்த விஜயகாந்த், சந்திரசேகர் ஆகியோர்களின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
விஜய்-தமிழன்: கடந்த 2002ஆம் ஆண்டு மஜித் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் விஜய் ஒரு வழக்கறிஞராகவும், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை சட்டத்தின் வழியில் பெற்றுத்தரும் ஒரு கேரக்டரிலும் நடித்திருப்பார். உலக அழகி பிரியங்கா சோப்ரா இந்த படத்தில்தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளி - பாலம்: தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து கொடுமைப்படுத்தும் வில்லனை எதிர்த்து தட்டி கேட்ட முரளியின் குடும்பம் வில்லனின் ஆட்களால் சிதைக்கப்படும். அதற்கு பழிவாங்கும் வகையில் தொழிலாளர்களுக்கு துரோகம் செய்பவரும், ஊழல் அமைச்சருமான வாசுதேவனை முரளியும் அவரது நண்பர்களும் கடத்தி பாலத்தில் வைத்துக் கொண்டு மிரட்டும் கதை தான் பாலம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout