திருமணமான பெண் விரும்பிய நபருடன் வாழலாம்… நீதிமன்ற தீர்ப்பால் குமுறிய கணவர்!
- IndiaGlitz, [Wednesday,June 21 2023]
உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் காணாமல் போன தனது மனைவியை மீட்டு தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு விரும்பிய ஆணுடன் அவர் வாழ்க்கை நடத்தி வருகிறார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என பெண்ணிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் அப்பெண்ணின் கணவர் கடும் கோபம் அடைந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
டேராடூன் பகுதியில் வசித்துவரும் ஜிம் பயிற்சியாளர் ஒருவரை பிப்ரவரி 2012 இல் இளம்பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 10 வயதில் ஒரு மகன் மற்றும் 6 வயதில் ஒரு மகள் இருந்த நிலையில் அப்பெண் சமூக வலைத்தளத்தில் சந்தித்த ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்த அந்த பெண், ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத் பகுதியில் வசித்துவந்த தனது காதலருடன் லிவ்-இன் முறையில் வசிக்கத் துவங்கியிருக்கிறார்.
இதையடுத்து காணாமல் போன தனது மனைவியைத் தேடி வந்த ஜிம் பயிற்சியாளர் கடந்த ஆகஸ்ட் 7, 2022 முதல் எனது மனைவியைக் காணவில்லை. அவர் சட்டவிரோதமாக கடத்தப் பட்டுள்ளார் என்று கூறி உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் பங்கஜ் புரோகித் மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் அடங்கிய பென்ச் விசாரித்து வந்த நிலையில் அப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் பேசிய அப்பெண் எனது கணவர் என்னை தவறாக நடத்தினார். இனிமேல் அவருடன் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்படவில்லை. விரும்பிய நபருடன் வாழ்வதற்கு அவருக்கு உரிமையிருக்கிறது, அவர் விரும்பிய நபருடனே வாழலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் இந்த உத்தரவை கேட்டு அந்தக் கணவரும் அவருக்குச் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் அருண் குமர் ஷர்மா அதிர்ந்து போயுள்ளனர். மேலும் இதுபோன்ற தீர்ப்புகள் திருமண சட்டத்திற்கே பாதகமாக அமையும் என்றும் இதனால் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.